தன் தலைமையின்கீழ் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாகப் படைத்த மாணவனின் நெகிழ்ச்சியே தன்னை 50 வயதில் ஆசிரியராகத் தூண்டியதாகச் சொல்கிறார் விக்னஸ் விநாயக் வீரப்பன்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக் கலைஞராக இருக்கும் இவர், மாணவர்களின் வாழ்வில் தாம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தம்மைக் கல்வியின்பால் ஈர்த்ததாகச் சொன்னார்.
கற்பித்தலில் தமக்கு முன் அனுபவம் இருந்தாலும் அதனை இன்னும் திறம்படச் செய்ய வேண்டும் என்பதால் தேசியக் கல்விக்கழகத்தில் இணைந்து பட்டப்படிப்புக்குப் பிந்திய பட்டயச் சான்றிதழ் பெற்றுள்ளார். சிறு வயதில் கல்வியில் அதிக நாட்டமில்லை என்றாலும், அந்த மனப்பான்மையைத் தகர்த்து தற்போது உற்சாகத்துடன் பயின்று, முழுநேரமாகக் கல்வி கற்பிக்கத் தயாராகியுள்ளார் விக்னஸ்.
சாதாரண நிலைத் தேர்வில் மூன்று பாடங்களில் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்த இவர், 2017ல் இளங்கலைப் படிப்பில் சேர்ந்து பெரும் போராட்டத்துக்குப் பின்பே கல்வித் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார்.
தன்னிடம் பயிலும் மாணவர்கள் கல்வியிலும் வாழ்க்கையிலும் வாகை சூடுவது, தனக்கு வெகுமதி அளிப்பதாக இவர் கூறினார்.
“50 என்பது அதிக வயதில்லை. எந்த வயதிலும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு முழுமூச்சுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்,” என்கிறார் விக்னஸ்.
நடுத்தர வயதில் புதிய பரிமாணத்தில் அடியெடுத்து வைத்துள்ள விக்னஸ் ஒருபுறமிருக்க, சிறு வயதிலிருந்தே ஆசைப்பட்டு ஆசிரியராகி இருக்கிறார் பா.விவேகா.
கடந்த 27 ஆண்டுகளாக ஆங்கிலமும் கணிதமும் கற்பித்து வரும் தம் தாயாரின் ஈடுபாட்டைக் கண்டு தாமும் ஆசிரியராக வேண்டும் எனும் கனவைத் துரத்திப் பிடித்துள்ளார் இவர்.
தொடர்புடைய செய்திகள்
தேசியக் கல்விக்கழகத்தில் இளங்கலை அறிவியல், கல்வியில் கணக்கீட்டுச் சிந்தனைத் துறையில் (Bachelor of Science and computational thinking in education) பட்டம் பெற்றுள்ள விவேகா, அடிப்படையில் பரதநாட்டியக் கலைஞர்.
“நடனத்துக்குத் தொடர் பயிற்சியும் விடாமுயற்சியும் அவசியம். அந்தத் தத்துவத்தை மாணவர்களுக்குச் சொல்லித் தர முடியும் என நம்புகிறேன்,” என்றார் இவர்.
சிறுவயதில் ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள திறனைக் கண்டறிந்து ஊக்கப்படுத்திய சில ஆசிரியர்களைக் கண்டு வியந்ததாகக் கூறிய விவேகா, அவர்களைப்போல எல்லா மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் உயர்ந்த எண்ணமுடைய ஆசிரியராக வேண்டும் என விரும்புகிறார்.
தேசியக் கல்விக் கழக பட்டமளிப்பு விழா
இவ்வாண்டுக்கான நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக தேசியக் கல்விக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஜூலை 11ஆம் தேதி நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
கல்வி அமைச்சரும் பொதுச் சேவைத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான சான் சுன் சிங் கலந்துகொண்ட இவ்விழாவில், 105 இளங்கலை, 229 பட்டயக் கல்வி, 377 முதுகலைப் பட்டயக்கல்வி மாணவிகள் உள்ளிட்ட 711 பேர் பட்டம் பெற்றனர்.
தேசியக் கல்விக் கழக இயக்குநர் பேராசிரியர் லியு வூன் சியா, கல்வித் தலைமை இயக்குநர் திருவாட்டி லியூ வெய் லீ உள்பட பல கல்வியாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
அத்துடன், வெவ்வேறு அங்கங்களில் சிறந்து விளங்கிய 44 மாணவர்களுக்கு விருதுகளும் ஆறு இளம் ஆசிரியர்களுக்கு தலைசிறந்த இளம் கல்வியாளர் விருதுகளும் வழங்கப்பட்டன.
பட்டம் பெற்றவர்களை வாழ்த்திப் பேசிய அமைச்சர் சான் சுன் சிங், இளம் ஆசிரியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை நன்கு பயன்படுத்தி புதிய வழிமுறைகளுடன் அடுத்த தலைமுறை மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இளம் தமிழாசிரியர்கள்
கணிதம், புவியியல், வேதியியல், இயற்பியல், இசை, கலைகள், உடற்கல்வி என பல பாடங்களில் பட்டம் பெற்றவர்களுடன் இணைந்து ஐந்து இளம் தமிழாசிரியர்களும் பட்டம் பெற்றுள்ளனர். பெருமையும் உற்சாகமும் ததும்ப, தாய்மொழிக் கல்வியைக் கற்பிக்கத் தயாராகியுள்ளனர் இவர்கள்.
நசீமா பேகம், 24, கோ புவனேஸ்வரி, 27, ஆர்த்தி கிருஷ்ணமூர்த்தி, 24, பாவனா இராஜாராம், 23, மரியா இமாகுலேட் ஆகிய ஐவரும் தங்கள் மாணவர்களைத் தமிழ் கற்க ஊக்குவிப்பதுடன், கலை, தமிழ்ப் பண்பாடு, நாகரிகத்தின் தொன்மையை எடுத்துரைத்து, பெருமைகொள்ள வைக்கும் நோக்குடன் செயல்படப்போவதாகக் கூறினர்.
மேலும், செயற்கை நுண்ணறிவு உட்பட இளம் மாணவர்களை ஈர்க்கும் தொழில்நுட்பங்களைக் கொண்டு புத்தாக்க முறையில் தமிழ் வகுப்புகளை மகிழ்ச்சியானதாக மாற்ற முயற்சி எடுக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

