வரும் ஆண்டுகளில் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து செழிப்புறும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் வியாழக்கிழமை (ஜூலை 11) நடைபெற்ற தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் 20ஆம் ஆண்டு நிறைவுவிழாவில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளின் மீதான ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் அவற்றுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்குமான உறவுகளை வலுப்படுத்துவதும் இக்கல்வி நிலையத்தின் முக்கிய நோக்கம்.
மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிங்கப்பூர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதாகவும் அவரது வெற்றி, இந்திய மக்களின் வாழ்க்கைத்தரம் கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்துள்ளதைக் காட்டுவதாகவும் திரு தர்மன் கூறினார்.
பிரதமர் மோடியின் வெற்றி, இந்தியாவின் வளர்ச்சியையும் அதன் அதிவேகப் பொருளியல் வளர்ச்சியையும் வெளிப்படுத்துவதாக திரு தர்மன் குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே உறவுகள் மேலும் வலுவடைவதை இனிவரும் காலங்களில் எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.
இருநாட்டு உறவுகளின் சீரான நிலைக்கு தெற்காசிய ஆய்வுக் கழகம் பெரும் பங்காற்றியுள்ளதாக திரு தர்மன் கூறினார்.
இக்கழகம் பல ஆண்டுகளாக நடத்திவரும் இந்தியா - சிங்கப்பூர் உத்திபூர்வக் கலந்துரையாடல், தெற்காசிய அயலக மக்கள் மாநாடு போன்ற நிகழ்ச்சிகள் இருநாட்டு உறவுக்குப் பெரிதும் உதவியுள்ளது எனக் கூறிய திரு தர்மன், அவற்றுக்குத் தன் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் இருந்து திறனாளர்களை ஒன்றுதிரட்டி சிங்கப்பூரின் நீண்டகாலத் திட்டங்களுக்கு இக்கழகம் உதவும் என திரு தர்மன் நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் மற்றோர் அங்கமாக, கோபிநாத் பிள்ளை - தெற்காசிய ஆய்வுக் கழக அறக்கட்டளை நிதித் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இக்கழகத்தின் முதல் தலைவரான திரு கோபிநாத் பிள்ளையைக் கௌரவிக்கும் விதத்தில் அவரின் பெயருடன் இந்த அறக்கட்டளை நிதி அறிமுகம் கண்டுள்ளது.
இந்திய மரபுடைமை நிலைய ஆலோசனைக் குழுவுக்கும் இந்து ஆலோசனை மன்றத்துக்கும் தலைவராகச் சேவையாற்றியது எனப் பல வழிகளில் திரு கோபிநாத் பிள்ளை இந்தியச் சமூகத்துக்கு முக்கியப் பங்காற்றியவர்.
“இந்த நிதி, எங்களது பணிகளை மேலும் சிறப்பாகச் செய்ய உதவும். தற்போது அமைச்சுகளில் இருந்து நிதி பெற்று வருகிறோம். அத்துடன், இந்த நிதியின் மூலம் கூடுதல் ஆய்வுகளிலும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபட முனைவோம்,” என்று தெற்காசிய கல்வி ஆய்வுக் கழகத் தலைவர் டான் டாய் யோங் கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளாக தென்கிழக்காசியா - தெற்காசியா உறவுகளில் முக்கியப் பங்களிப்புகளை வழங்கியுள்ளதை எண்ணி பெருமை கொள்வதாகவும் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து சிறப்பாகச் சேவையாற்ற கழகம் முனையும் என்றும் அவர் கூறினார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் வருகை தந்திருந்த 180 பேருக்கு இரவு உணவு வழங்கப்பட்டன. தெற்காசியக் கலாசாரத்தைப் பறைசாற்றும் ஆடல் பாடல் அங்கங்களும் இடம்பெற்றன.
.