மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள கினபாலு மலையிலிருந்து இறங்கும்போது காலில் காயமுற்ற சிங்கப்பூரைச் சேர்ந்த மாது வியாழக்கிழமையன்று (ஜூலை 11) மீட்கப்பட்டார்.
மலேசியாவின் ஆக உயரமான மலையான கினபாலுவிலிருந்து இறங்கும்போது 8.3 கிலோமீட்டர் தூரம் கடந்த பிறகு அந்த 41 வயது மாது வழுக்கி விழுந்தார். அப்பகுதி, மலை உச்சிக்கு 200 மீட்டர் கீழே இருக்கிறது.
சாபாவின் தீயணைப்பு, மீட்புச் சேவைப் பிரிவின் செயல்பாட்டு நிலைய இணைத் தலைவர் ரிக்கி சிங் ராம்டே இந்த விவரங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். மாதின் இடது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
காலை 8.06 மணிக்கு இச்சம்பவம் குறித்து தீயணைப்புப் பிரிவுக்குத் தகவல் கிடைத்ததாக திரு ரிக்கி கூறினார். காலை 10.50 மணியளவில் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
காயமுற்ற மாதுக்கு மலையேறிகளுக்கான வழிகாட்டி ஒருவரின் துணை இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.