ஹோங் லிம் பூங்காவில் சனிக்கிழமையன்று (ஜூலை 13) இவ்வாண்டுக்கான ‘ஃபெஸ்டிவல் கிரீன்பரேட்: வேக் அப் அண்ட் சுவாப்’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியான அதில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய டி-சட்டைப் பரிமாற்ற நிகழ்வு நடைபெறவுள்ளது. அதோடு, மேலும் பல சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள் இடம்பெறும்.
சிங்கப்பூரில் செயல்படும் கிரீன்ஸ்பேஸ்+ எனப்படும் சுற்றுச்சூழல் தொடர்பான புத்தாக்க இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 20 இளம் தொண்டூழியர்கள், இளையர்களை மையமாகக் கொண்டுள்ள அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கின்றனர். எல்லா வயதுப் பிரிவுகளிலும் நீடித்த நிலைத்தன்மையில் நாட்டம் கொண்டவர்களை ஊக்குவிப்பதோடு பொதுமக்களை நீடித்த நிலைத்தன்மை அம்சம்கொண்ட நடைமுறைகளைப் பின்பற்ற ஊக்குவிப்பது நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
தங்களுக்குப் பிரியமான, பயன்படுத்தப்பட்ட டி-சட்டைகளை விருப்பத்துக்கு ஏற்ப வடிவமைத்து நிகழ்ச்சியில் பரிமாற்றிக்கொள்ளுமாறு சிங்கப்பூரர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். டி-சட்டைப் பரிமாற்ற நிகழ்வை ஃபேஷன் பரேட் எனும் நிறுவனம் வழிநடத்துகிறது. இளையர்களால் நடத்தப்படும் அந்நிறுவனம், நீடித்த நிலைத்தன்மை அம்சங்களை மையமாகக் கொண்டு இயங்குகிறது.
நிகழ்ச்சி சனிக்கிழமை பிற்பகல் நான்கு மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடைபெறும். டி-சட்டை பரிமாற்ற நிகழ்வோடு பயிலரங்குகள் உள்ளிட்டவையும் நிகழ்ச்சியில் இடம்பெறும்.

