ஏறத்தாழ 6,000 பேர் கலந்துகொண்ட காமன்வெல்த் டிரைவ் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தின் குடமுழுக்கு விழாவில் அனைவரும் சிரமமின்றி வழிபட்டுச் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பக்தர்களை நீண்ட நேரம் நிற்க வைப்பதைத் தவிர்க்க, நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. குடமுழுக்கும் கோயிலுக்கு உள்ளே நடைபெற்ற நிகழ்வுகளும் திரையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
குடமுழுக்கு முடிந்தவுடன் பக்தர்கள் சிறுசிறு குழுக்களாக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சக்கர நாற்காலியில் இருந்தோர், மூத்தோர் உள்ளிட்ட தேவையுள்ளோர்ர் இறைவனை வழிபட முதலில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
“காணக்கிடைக்காத ஒரு நிகழ்வைக் கண்ட மனநிறைவு கிடைத்தது,” என்றார் பக்தர்களில் ஒருவரான சுலோச்சனா.
தன்னைப்போன்ற மூத்தோருக்கு முன்னுரிமை அளித்து வழிபட வைத்தது உட்பட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்ததாகச் சொன்னார் சுசீலா, 60.
குடமுழுக்கு விழாவுக்குத் தாங்கள் வந்ததே கடவுளின் ஆசியால்தான் எனக் கூறிய ஜெயமணி, 69, லீலா, 67, இருவரும், “வழிபாடு மட்டுமின்றி பிரசாதப் பைகள் வாங்கவும் உணவு உண்ணவும் வசதியாக இருந்தது,” என்றனர்.
இக்கோயிலின் கடந்த மூன்று குடமுழுக்குகளில் இரண்டைக் கண்டுள்ள பக்தர் தேவராஜ், “இந்த சிறப்பான நன்னாளில் வழிபாடு செய்தது, நான் நினைத்தது நிறைவேறும் என்ற ஆழமான நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது,” என்றார்.
கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்வது, பிரசாதம் வழங்குவது எனப் பல பணிகளில் ஈடுபட்ட தொண்டூழியர்களான தாய்-மகள் இணையர் அன்பரசி, 58, யுகனேஸ்வரி, 29, “கிடைக்கும் சிறிது நேரத்தில் பக்தர்களுக்குத் தொண்டு செய்வது மனநிறைவாக இருக்கிறது,” என்றனர்.
தொடர்புடைய செய்திகள்
பக்தர்களின் மகிழ்ச்சியே தனது மகிழ்ச்சி என்று உணர்ந்ததாகச் சொன்னார் மற்றோர் இளம் தொண்டூழியரான கிஷன், 24.
கால் தரையில் படாமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த பெண் தொண்டூழியர்களில் இருவரான விஜயலட்சுமி, 52, சுபா, 48, “மொத்தம் 60 பெண்கள் இணைந்து பக்தர்களுக்கு வழங்கவேண்டிய தீர்த்தப் பிரசாதத்தை ஒரு மணி நேரத்தில் 10,000 புட்டிகளில் நிரப்பினோம். இவ்வாறு இணைந்து பணியாற்றுவது உற்சாகம் அளிக்கிறது,” என்றனர்.

