மாமனாரால் கொல்லப்பட்ட தொழிலதிபர்: சொகுசுக் கைக்கடிகாரம் திரும்பப் பெறும் முயற்சி தோல்வி

மாமனாரால் கொல்லப்பட்ட தொழிலதிபர்: சொகுசுக் கைக்கடிகாரம் திரும்பப் பெறும் முயற்சி தோல்வி

2 mins read
ed12227a-c4ca-4d3a-a272-093a271b8c76
திரு ஸ்பென்சர் டுப்பானி (இடது), தனது மாமனார் டான் நம் செங்கால் 2017ஆம் ஆண்டு பூன் டாட் ஸ்திரீட்டில் கொல்லப்பட்டார். - படங்கள்: ஸ்பென்சர் டுப்பானி, ஃபேபேஸ்புக் / ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மாமனாரால் 2017ஆம் ஆண்டு கொல்லப்பட்ட ஸ்பென்சர் டுப்பானி எனும் தொழிலதிபர் அணிந்திருந்த சொகுசுக் கைக்கடிகாரத்தைத் திரும்பப் பெற அவரின் சொத்துப் பராமரிப்பாளர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர்.

அம்முயற்சியில் அவர்கள் தோல்வியடைந்தனர். பூன் டாட் ஸ்திரீட்டில் கொல்லப்பட்ட திரு டுப்பானியின் ‘ரிச்சர்ட் மில்ல’ கைக்கடிகாரத்தைத் தன்னிடம் ஒப்படைக்க அவரின் பெற்றோர் மீது வழக்கு தொடரப்பட்டது. திரு டுப்பானியின் சொத்துகளைப் பராமரித்த இருவருடன் சேர்ந்து அவரின் மனைவி ‌ஷைலா டான் செங் செங் வழக்கு தொடர்ந்தனர்.

திருவாட்டி டானின் சகோதரியான திருவாட்டி ‌ஷெ டான் சான் சான், திரு டுப்பானியின் முதல் மனைவியான திருவாட்டி ஃபெலி‌ஷியா கே லே ஹோங் ஆகியோர் சொத்துகளைப் பராமரித்த மற்ற இருவர். அந்த சொகுசுக் கைக்கடிகாரம் அல்லது அதற்கு ஈடாக 389,205.13 வெள்ளியைப் பெறுவது அவர்களின் நோக்கம்.

திரு டுப்பானி மாண்ட பிறகு அவரின் உடைமைகளை அவரது தந்தை ஷாம்லால் டுப்பானி பிசேய்சார் மீட்டுக்கொண்டார். மீட்கப்பட்ட பொருள்களில் ரத்தக் கரைபடிந்த அந்தக் கைக்கடிகாரமும் அடங்கும்.

தனது மகன் மணமுடிக்காமல் ஜோவேன் இயோ எனும் பெண்ணுடன் வாழ்ந்துகொண்டிருந்த லியடோன் ரெசிடன்ஸ் அடுக்குமாடி வீட்டில் அந்தக் கைக்கடிகாரத்தை வைத்ததாக திரு ‌ஷாம்லால் டுப்பானி தெரிவித்தார். அந்தக் கைக்கடிகாரத்தை அவர் திரு டுப்பானியின் தாயாரான, தாம் போ குவாயிடம் ஒப்படைத்ததாக சொத்துப் பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர். திருவாட்டி தம், கைக்கடிகாரத்தை விற்று அதில் வந்த தொகையைத் தான் வைத்துக்கொண்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஆனால் அந்தக் கைக்கடிகாரத்தைப் பெற்றதை திருவாட்டி தம் மறுத்தார். மனைவியிடமிருந்து விவாகரத்தான திரு ‌ஷாம்லால் டுப்பானி, திருவாட்டி தாம் இருவரும் கைக்கடிகாரத்தை வைத்துப் பணம் சம்பாதித்ததாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிகப்படும் திருவாட்டி இயோ மீது வழக்கு தொடரப்படவில்லை.

திருவாட்டி இயோவுக்கும் திருவாட்டி ஸ்பென்சர் டுப்பானிக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

அனுமதி வழங்கப்படாத ஒருவர் இன்னொருவருக்குச் சொந்தமான பொருளைப் பெற்று அதன் சொந்தக்காரரின் உரிமையில் தலையிடும் வகையில் அதைக் கையாள்வது சட்டப்படி குற்றமாகும்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், திரு ஸ்பென்சர் டுப்பானியின் சொத்துப் பராமரிப்பாளர்கள் தொடுத்த வழக்கை மாவட்ட நீதிபதி தள்ளுபடி செய்தார். அதனைத் தொடர்ந்து அவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 12) உயர் நீதிமன்ற நீதிபதி மேவிஸ் சியோன், மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தார். திரு ‌ஷாம்லால் டுப்பானி, திருவாட்டி தாம் இருவரும் தவறான முறையில் சம்பந்தப்பட்ட பொருளைக் கையாளவில்லை என்று அவர் தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்