நாட்டின் நிலைத்தன்மைக்கு ஆணிவேர் ஆகும் போர்க்காலப் பயிற்சி

2 mins read
9843b48f-25bc-4daa-984a-74f820aecdcb
‘எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்’ தளவாட பெருநிறுவனத்தின் தலைமை நிர்வாகி லோகநாதன் ராமசாமி. - படம்: சிங்கப்பூர் ஆயுதப் படை

சிங்கப்பூர் ஆண்கள், ஈராண்டு முழுநேர தேசிய சேவையை முடித்த பிறகு வேலை செய்யும்போது அவர்கள் தங்கள் வேலைக்கு நடுவே ஓரிரு வாரங்களுக்குப் போர்க்காலப் படையினராக தேசிய சேவையைக் குறிப்பிட்ட காலத்திற்குச் செய்து வரவேண்டும்.

இதற்காக இவர்கள் செய்யும் தியாகம், நாட்டின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் ஆதரிக்கிறது. 

முழுநேர தேசிய சேவையாளராகத் தொடங்கிய ‘எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்’ தளவாட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லோகநாதன் ராமசாமியின் பயணத்தில் நாட்டுப்பற்றும் சிங்கப்பூர் ஆயுதப் படை மீதான நல்லபிமானமும் பிணைந்துள்ளன. 

ஜூலை 1ஆம் தேதி இடம்பெற்ற சிங்கப்பூர் ஆயுதப்படை தினத்தைப் பெருமையுடன் நினைவுகூர்ந்த திரு லோகநாதன், 61, தேசிய சேவை என்பது ஈராண்டுகள் கடந்தும் சேவையாளர்களின் வாழ்க்கையுடன் இணையும் உணர்வாகக் கருதுகிறார். 

எளிய குடும்பத்தைச் சேர்ந்த திரு லோகநாதனுக்கு, இந்தியாவிலிருந்து இங்குப் புலம்பெயர்ந்த தம் பெற்றோர் கடமை உணர்வையும் கட்டுக்கோப்பையும் கற்றுக்கொடுத்தார்கள். 1981ல் தேசிய சேவையில் சேர்ந்த இவர், அதில் நல்ல முறையில் பயிற்சி பெற்று சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரியாக உறுதி செய்யப்பட்டார். 

தேசிய சேவையின்வழி வாய்த்த நல்ல அனுபவங்களாலும் வாழ்க்கை முறையாலும் முழுநேர தேசிய சேவையாளராகச் சேர அவர் முடிவெடுத்தார். வரலாற்றுத் துறையில் இளநிலைப் பட்டக்கல்வி பயின்ற இவர், சிங்கப்பூர் ஆயுதப் படையில் மீண்டும் சேர்ந்தார். 

திரு லோகநாதன் 25 ஆண்டுகளாக காலாட்படையிலும் தளவாடப் படையிலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்றார். கர்னல் பதவி வரை உயர்ந்த திரு லோகநாதன், 2008ல் ஆயுதப் படைகளிலிருந்து விலகி ‘எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்தார். 

தொடக்கத்தில் வர்த்தக ஆதரவுப் பிரிவில் துணைத் தலைவராகச் செயலாற்றிய திரு லோகநாதனுக்கு ராணுவச் சேவையில் இருந்த முன்னைய அனுபவங்கள் கைகொடுத்தன.

2014ல் அவர் தலைமைத் தளவாட அதிகாரியாக உயர்ந்து பின் 2019ல் அவர் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்றார். அவரது தலைமைத்துவத்தின்கீழ், உள்துறை அமைச்சு, சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப் படை உள்ளிட்ட அவசிய சேவை அமைப்புகளுக்கு ‘எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனம் ஆதரவு தருகின்றது.

தங்கள் வேலைக்கு இடையே போர்க்காலப் படையினராகப் பயிற்சி செய்ய வேண்டியவர்களுக்கு உரிய ஏற்பாடுகளை வழங்குவது இவர் வழிநடத்தும் நிறுவனத்தின் வழக்கம். “புதிதாக வேலையில் சேர்வோருக்கு நாங்கள் ஒளிவு மறைவின்றிச் சொல்வது, தேசிய சேவையைத் தள்ளிப்போடுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்,” என்று அவர் கூறினார். 

“தவிர்க்க முடியாத சில சூழல்கள் தவிர, நான் வழிநடத்தும் நிறுவன ஊழியர்கள், தங்களது தேசிய சேவை முகாம்களால் போர்க்காலப் பயிற்சிக்காக அழைக்கப்படும்போது அதனை நிறைவேற்றுவதையே விரும்புவேன். அந்தக் காலகட்டத்தில் வேலையைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அவர்கள் ராணுவப் பயிற்சியைப் பெறவும் ஊக்குவிப்பேன்,” என்று அவர் கூறினார்.  

தம்முடன் வேலை செய்வோருக்கு மட்டுமின்றி வீட்டில் தம் மகனுக்கும் இதே பண்பை திரு லோகநாதன் போதிக்கிறார். “என் வழியில் பின்பற்றி போர்க்காலப் பயிற்சிகளுக்குத் தவறாமல் செல்லும் என் மகனையும் அவனைப் போன்ற இந்நாட்டுக் குடிமகன்களையும் எண்ணி நான் பெருமைகொள்கிறேன்,” என்று அவர் கூறினார். 

குறிப்புச் சொற்கள்