ஜூலை 13ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு ‘நல்லிணக்கத்துடன் ஆட்டம் பாட்டம்’ என்ற கருப்பொருளோடு நடைபெற்ற இந்திய மரபுடைமைக் கலைகள் கொண்டாட்டம் 2024, பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் ‘நமது தெம்பனிஸ் நடுவத்தில்’ களைகட்டியது.
ஆனந்தா மரபுக்கலைகள் கூடம் (ஆட்டம்), இந்திய மரபுடைமை நிலையம், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், மக்கள் கழக இந்தியர் நற்பணி பேரவை, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி, ஏறத்தாழ 750 பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்து சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகங்களின் வளமான, பலதரப்பட்ட மரபுக்கலைகளை இரண்டு படைப்புகளின்வழி கொண்டாடியது.
“நமது இந்திய பாரம்பரியக் கலைகள் தொன்மையான கலைகள். ஆனால், அவற்றைப் பற்றிய புரிதல் பலரிடம் இல்லை,” என்றார் இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவர் ஆர். ராஜாராம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மரபுக்கலைகளைப் பற்றிய புரிதலைப் பொதுமக்களிடையே அதிகரிக்க இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாக அவர் சொன்னார்.
குறிப்பாக இளையர்களிடம் மரபுக்கலைகளை அறிமுகப்படுத்தி, அவற்றைப் பற்றிய சரியான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதோடு, அவற்றில் அடுத்த தலைமுறையினரை ஈடுபடுத்துவதும் முக்கியம் என்றார் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் இயக்குநர் சாந்தி செல்லப்பன்.
“சிங்கப்பூரின் பல இனச் சமுதாய சூழலில் நமது மரபுக்கலைகளைப் போற்றுவதற்கும் பிறருக்குத் தெரிவிப்பதற்கும் இது போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியம்.
“பல கரங்கள் ஒன்றுகூடும்போது நம்மால் மரபுக்கலைகள் என்ற தேரைச் சிறப்பாக இழுக்க முடிகிறது,” என்று அவர் மேலும் சொன்னார்.
கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் ஆல்வின் டான் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாக சிங்கப்பூரில் முதல் முறையாக பெருந்திரள் கோலாட்ட நடனமும் (Largest Mass Kolaattam Dance) இந்தியப் பாரம்பரிய நாட்டுப்புற தாளவாத்தியங்களின் ஆகப் பெரிய கலவையும் (Largest Medley of Indian Traditional Folk Percussions) சாதனை நிகழ்ச்சிகளாக இடம்பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
“ஐந்து தாளவாத்தியங்களான பறை, உருமி மேளம், செண்டை, பங்க்ரா டோல், டோல் டாஷா ஆகியவற்றை ஒன்றுசேர்ப்பது சவாலாக இருந்தாலும், அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் படைப்பிற்குத் தயார் செய்தோம்,” என்றார் ஆட்டத்தின் தாளவாத்திய ஒருங்கிணைப்பாளர் அக்ஷரா திரு.
பல்வேறு கலைக் குழுக்கள், பள்ளிகள், இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள், பெரியவர்கள், பயிற்சியாளர்கள், பொதுமக்கள் இச்சாதனை நிகழ்வுகளில் கலந்துகொண்டு இந்திய சமூகங்களின் வளமான கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் காட்சிப்படுத்தினர்.
மேலும், சமூக ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் வளர்க்கும் நோக்கத்தோடு பல்வேறு இந்திய இனக்குழுக்கள், சிங்கப்பூரர்கள், புதிய குடிமக்கள், நிரந்தரவாசிகள் எனப் பலதரப்பட்ட இந்திய மக்களை இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றிணைத்தது என்றால் அது மிகையில்லை.
இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக இந்தியாவிலிருந்து மரபுக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பொதுமக்களுக்குப் பட்டறைகளை நடத்தி அவர்களின் ஆர்வத்தைத் தூண்டியதாகச் சொன்னார் நிகழ்ச்சியின் திட்ட ஆலோசகரும் ஆட்டத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான மரியா பவானி தாஸ்.
மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு லாப நோக்கற்ற அமைப்பான ‘ஆட்டம்’ தொடர்ந்து ஒரு தளமாகத் திகழும் என்று கூறினார் அதன் நிறுவனரும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளருமான கோபி கண்ணன்.
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கு இந்த நிகழ்ச்சி சான்றாக அமைகிறது,” என்றார் அவர்.
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற இந்த இரண்டு நிகழ்வுகளின் பதிவுகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை அமைச்சர் டான், ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கி குழுப் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.

