தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

20 ஆண்டு காணாத அளவு குழந்தைப் பிறப்பு சரிவு

2 mins read
7f19053f-e399-44aa-9adc-cb9fb510917f
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 2023ஆம் அண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, குறைந்தது 20 ஆண்டுகளில் காணப்படாத அளவுக்குக்கு சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு மிகக் குறைவாக இருந்து வருவதை இது சித்திரிப்பதாகக் கூறப்படுகிறது.

சென்ற ஆண்டு மொத்தம் 33,541 குழந்தைகள் பிறந்தன. இந்த எண்ணிக்கை, 2022ஆம் ஆண்டில் பதிவான 35,605ஐக் காட்டிலும் 5.8 விழுக்காடு குறைவு.

2021ஆம் ஆண்டில் 38,672 குழந்தைகள் பிறந்தன. அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டின் எண்ணிக்கை 13.3 விழுக்காடு குறைவாகும்.

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் வியாழக்கிழமையன்று (ஜூலை 11) 2023ஆம் ஆண்டுக்கான பிறப்பு, இறப்புப் பதிவு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் சென்ற ஆண்டு பிறந்த குழந்தைகள் குறித்த புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

வரலாற்றில் முதன்முறையாக சிங்கப்பூரின் கருவள விகிதம் (டிஎஃப்ஆர்) 2023ஆம் அண்டில் ஒன்றுக்குக்கீழ் குறைந்ததென்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை தெரிவிக்கப்படவிவ்லை.

டிஎஃப்ஆர், சராசரியாக ஒரு பெண் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். சென்ற ஆண்டு அந்த விகிதம் 0.97ஆகப் பதிவானது. இது, உலகளவில் ஆகக் குறைவானவற்றில் அடங்கும்.

2023ஆம் ஆண்டில் மொத்தமாக 26,888 பேர் இறந்தனர். 2022ஆம் ஆண்டு பதிவான 26,891ஐவிட அந்த எண்ணிக்கை 0.01 விழுக்காடு மட்டுமே குறைவாகும்.

அதேவேளை, 2021ஆம் அண்டு இறந்தோரின் எண்ணிக்கையைவிட சென்ற ஆண்டு மாண்டோரின் எண்ணிக்கை 10.7 விழுக்காடு அதிகம்.

இதய நோய்கள், ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், நுரையீரல் மற்றும் சுவாசப் பிரச்சினை சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவையே மரணங்களுக்கு முக்கியக் காரணங்களாக இருந்தன. சென்ற ஆண்டு மாண்டோரில் பாதி பேர் இப்பிரச்சினைகளால் உயிரிழந்தவர்கள். கால்வாசி பேர் புற்றுநோய்க்கு பலியாயினர்.

முதன்முறையாக கலப்பினப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளின் புள்ளிவிரங்கள் சென்ற ஆண்டுக்கான அறிக்கையில் சேர்க்கப்பட்டது.

சென்ற ஆண்டு பிறந்த குழந்தைகளில் 28.4 விழுக்காட்டினர் கலப்பினப் பெற்றோருக்குப் பிறந்தவை. இந்த எண்ணிக்கை, 2014ல் பதிவான 12.4 விழுக்காட்டைவிட அதிகம்.

2011ஆம் ஆண்டு முதல், ஒரு கலப்பினத் தம்பதி, குழந்தையின் இனத்தைப் பதிவிடும்போது தங்கள் இருவரின் இனங்களையும் பதிவிட வழிவகுக்கப்படுகிறது. தாய் அல்லது தந்தையின் இனத்தை மட்டும் பதிவிடுவதற்குப் பதிலாக அவ்வாறும் செய்ய வகைசெய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்