ஹவாயி கடற்படை பயிற்சியில் சிங்கப்பூர் போர்க் கப்பல்

ஹவாயி கடற்படை பயிற்சியில் சிங்கப்பூர் போர்க் கப்பல்

2 mins read
e5891ad2-9776-469e-9f10-4fe9e71766ef
பயிற்சியில் ஈடுபட்ட ‘ஆர்எஸ்எஸ் ஸ்டேல்வார்ட்’ போர்க்கப்பலும் ஆகாயப் படை வீரர்களும். - படம்: தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூர் அதிவேக போர்க்கப்பலான ‘ஆர்எஸ்எஸ் ஸ்டேல்வார்ட்’ ஹவாயி கடலோரப் பகுதியில் நடைபெறும் கடற்படை போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சிங்கப்பூர் உள்ளிட்ட 29 நாடுகளின் கடற்படை, தரைப்படை மற்றும் ஆகாயப் படையைச் சேர்ந்த 25,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அந்த 36 நாள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாண்டு, உயர்தர கடற்படை போர்ப்பயிற்சியில் சிங்கப்பூர்க் குடியரசின் கடற்படையின் ‘ஆர்எஸ்எஸ் ஸ்டேல்வார்ட்’ போர்க் கப்பல் இடம்பெற்று உள்ளது.

ரிம்பேக் (ரிம் ஆஃப் த பசிபிக்) என்னும் பெயரிலான அந்தப் பயிற்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி நிறைவுறும் என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) தெரிவித்தது.

கொரிய குடியரசு, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவின் போர்க்கப்பல்களைக் கொண்ட பணிப்பிரிவை அது வழிநடத்துகிறது.

கப்பல்கள் சென்றுகொண்டு இருக்கும் நிலையில் ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள்களையும் பிற விநியோகப் பொருள்களையும் மாற்றிவிடும் பயிற்சியில் சிங்கப்பூர் போர்க்கப்பல் இடம்பெற்றது.

கடலோர தளபத்திய மையங்களில் நிறுத்தப்பட்ட சிங்கப்பூர் கடற்படையின் 16 வீரர்களைக் கொண்ட குழுவும் பயிற்சி நடத்தும் திட்டத்திற்கும் ஒருங்கிணைப்புக்கும் உதவிபுரிந்ததாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

கடற்பகுதியில் அதிவேகமாகச் சென்ற நிலையில் இரு ஏவுகணைகளை ஆகாயத்தை நோக்கி அனுப்பியும் இதர இரு ஏவுகணைகளை வீழ்த்தியும் பயிற்சியில் ஈடுபட்டது ‘ஆர்எஸ்எஸ் ஸ்டேல்வார்ட்’ போர்க்கப்பல் .

அந்தப் பயிற்சி சிங்கப்பூரின் ஆகாயத் தற்காப்புத் திறன்களைச் சோதிப்பதில் முக்கிய பங்கு வகித்ததாக அந்தக் கப்பலின் தளபத்திய அதிகாரி லெப்டினென்ட் கலோனல் சேம் டான் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் வான்வெளி போர் எதிர்ப்புத் திறன்களின் ஆற்றலையும் துல்லியத்தையும் அது பிரதிபலித்ததாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்