‘உடல்நலனை நலிவடையச் செய்யும் பழக்கங்களைத் திருத்திக்கொள்வது அவசியம்’

‘உடல்நலனை நலிவடையச் செய்யும் பழக்கங்களைத் திருத்திக்கொள்வது அவசியம்’

2 mins read
a66b4f69-fa77-4798-9c6f-7c410a5900ff
ஜூலை 14ம் தேதி செந்தோசாவிலுள்ள பலவான் கடற்கரையில் நடைபெற்ற ‘நற்பணி சமூகக் குதூகலம் 2024’ எனும் சமூக குடும்பக் கேளிக்கை விழாவில் பங்கேற்றவர்கள். - படம்: பே.கார்த்திகேயன்

ஒவ்வொரு சமூகத்திற்கும் சுகாதாரம் சார்ந்த சவால் உள்ளபோதிலும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

வருடாந்திர நற்பணி சமூகக் கேளிக்கை விழாவில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங், நிகழ்வில் ஒன்றுகூடிய 4,000க்கும் அதிகமானோரிடம் உடல் நலனை நலிவுறச் செய்யும் பழக்கங்களைத் திருத்திக்கொள்வது அவசியம் என்று தெரிவித்தார்.

“நாம் ஆய்வு செய்கையில், ஒவ்வொரு சமூகத்திற்கும் குறிப்பிட்ட ஒருசில சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளன என்பதைக் கண்டறிந்தோம். உதாரணமாக, சீனச் சமூகத்தினர் அதிகளவில் கொழுப்பு மற்றும் சோடியம் உட்கொண்டு குறைந்த அளவில் உடற்பயிற்சி செய்பவர்களாக இருக்கின்றனர்.

“மலாய் சமூகத்தினர் ஆக அதிகமான உடற்பருமன் மற்றும் புகைபிடிக்கும் விகிதத்தைக் கொண்டுள்ளனர். இந்தியச் சமூகத்தைப் பொறுத்த அளவில், நீரிழிவு பாதிப்பும் அதிகளவில் சர்க்கரை உட்கொள்வதும் அவர்களின் கவலைகளாக உள்ளன. 

“எனவே, ஒவ்வொருவரும் அவர்களின் சொந்தச் சமூகத்தில் உள்ளவர்களைச் சென்றடைந்து, தவறான  பழக்கங்களைத் திருத்திக்கொள்வது அவசியம்”, என்றார் அமைச்சர் ஓங்.

இதனிடையே, சுகாதார விழிப்புணர்வை வலியுறுத்திய சமூகக் குடும்பக் கேளிக்கை விழாவில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், குடும்பத்துடன் இணைந்து பங்கேற்ற இந்தத் திருவிழா, உடல்நலனைப் பேணும் பழக்கத்தை ஊக்குவிப்பதாக இருந்தது என்று தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.

லிம்பாங் சமூக மன்றத்திலிருந்து இந்நிகழ்விற்கு வருகையளித்த திருவாட்டி இந்திராணி, “தமிழ்ச்  சமூகத்தைச் சேர்ந்த இவ்வளவு பேரை ஒரே இடத்தில் பார்ப்பது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

அவரைப் தொடர்ந்து பேசிய அவரின் கணவர் திரு உதயகுமார், “வேலை பார்க்கும் வயதில் உழைப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், ஓய்வு பெற்ற பிறகு இத்தகைய நடவடிக்கைகளில் பங்கேற்பது மிகவும் அவசியம். மனத்திற்கும் உடலுக்கும் அவை உற்சாகம் அளிக்கின்றன,” என்று சொன்னார்.

“இந்த ஆண்டு உடல்நலம், சுகாதாரப் பராமரிப்பு ஆகிய இரண்டையும் நற்பணிப் பேரவையின் சமூக ஒன்றுகூடல் முன்னிறுத்தியுள்ளது. 

“மூப்படைந்து வரும் நம் சமூகத்தில், நாம் தொடர்ந்து சுகாதாரம் பற்றிய கருத்துகளை வலியுறுத்த வேண்டும். மூப்படைந்த பின்னர் அது குறித்து யோசிப்பதைக் காட்டிலும் அதற்கு முன்பே நாம் அந்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து யோசித்து, அதற்கேற்றாற்போல் ஆயத்தமாக இருப்பது மிகவும் இன்றியமையாதது என்பதையே இவ்வாண்டு விழாவின் கருப்பொருள் சுட்டுகிறது.

“இதன் அடிப்படையில், நாம் ஒரு தாய் மக்களாக ஒரே சமூகமாக ஒன்றுகூடும் இந்நிகழ்வில் துணைச் சமுதாயத்தினருடனும் இணைந்து செயலாற்ற வேண்டும்,” என்று சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்