புதிய தனியார் வீடுகளின் விற்பனை ஜூன் மாதம் சிறிதளவு அதிகரித்தது.
புறநகர்ப் பகுதிகளில் வீடுகளுக்கான தேவை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
விற்பனைக்கு விடப்படும் புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும் விற்கப்பட்ட புதிய வீடுகளின் எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது.
ஜூன் மாதம் 228 புதிய தனியார் வீடுகளை சொத்து மேம்பாட்டாளர்கள் விற்றனர்.
இது மே மாதம் விற்கப்பட்ட புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கையைவிட 2.2 விழுக்காடு அதிகம்.
இந்தத் தகவல்களை ஜூலை 15ஆம் தேதியன்று நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்டது.
வெளியிடப்பட்ட தரவுகளில் எக்செக்யூட்டிவ் கொண்டோமினியம் வீடுகள் சேர்க்கப்படவில்லை.
ஆண்டு அடிப்படையில் புதிய தனியார் வீடுகளின் விற்பனை 18 விழுக்காடு சரிந்தது.
தொடர்புடைய செய்திகள்
2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 278 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன.
ஜூன் மாதம் விற்கப்பட்ட புதிய தனியார் வீடுகளில் பெரும்பாலானவை (57.9 விழுக்காடு) புறநகர் பகுதிகளில் இருப்பதாக சிங்கப்பூர் ரியால்ட்டர்ஸ் சொத்து முகவையின் ஆய்வு, தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவர் திரு மோகன் சந்திரசேகரன் தெரிவித்தார்.
விற்பனை செய்யப்பட்ட புதிய தனியார் வீடுகளில் 31 விழுக்காடு வீடுகள் சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்துக்குள் உள்ள பகுதிகளிலும் 11 விழுக்காடு வீடுகள் நகர மையத்திலும் உள்ளன.