சிங்கப்பூரில் தனியார் மருத்துவமனை ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களில் இடம்பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கான செலவைச் சரிக்கட்ட அதிகத் தொகைக்கு அந்தக் காப்புறுதித் திட்டங்களை எடுத்திருப்போரின் ஒட்டுமொத்த விகிதாசாரத்தில் 5 விழுக்காடு சரிவு கண்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் அமைச்சு கூறியது.
கடந்த 2021ஆம் ஆண்டு 40 விழுக்காடாக இருந்த சிங்கப்பூரர் மற்றும் நிரந்தரவாசிகளின் விகிதம் 2023ஆம் ஆண்டு 38 விழுக்காட்டுக்கு குறைந்ததாகவும் அது தெரிவித்தது.
அதேபோல, 2020ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 60 வயதைக் கடந்தோரில் 2.2 விழுக்காட்டினர் தங்களது ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களில் இருந்து வெளியேறி அடிப்படை மெடிஷீல்ட் லைஃப் காப்புறுதிக்குத் திரும்பியுள்ளனர்.
பொது மருத்துவமனையில் தனிப்பட்ட நோயாளிகளாகச் சிகிச்சைபெற அதிகத் தொகையைக் காப்புறுதிச் சந்தாவாகச் செலுத்தியவர்கள் அவர்கள்.
அந்தக் காப்புறுதிச் சந்தாத் தொகை அதிகரிக்கத் தொடங்கியதாலும் சந்தாத் தொகையை மெடிசேவில் கழிக்க முடியாது என்பதாலும் ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களில் இருந்து பலரும் வெளியேறியதாக நம்பப்படுகிறது.
“2023ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களில் இடம்பெற்று இருந்த எல்லா வயதுப் பிரிவினருடனும் ஒப்பிடுகையில், தனியார் மருத்துவமனைக்கான அந்தத் திட்டத்தில் இருந்த 60 வயதுக்கும் மேற்பட்டோரின் விகிதாசாரம் கணிசமாகக் குறைவாக இருந்தது,” என்றும் அமைச்சு தெரிவித்தது.
அதேநேரம், மெடிஷீல்ட் லைஃப் என்பது பொது மருத்துவமனைகளில் பெறும் சிகிச்சைகளுக்குக் கட்டணக் கழிவைத் தருகிறது. தனிப்பட்ட பராமரிப்பை விரும்புவோர் கூடுதல் காப்புறுதியை வாங்கிக்கொள்ளலாம். 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் அவ்வாறு செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கான சந்தாத் தொகையை ஆண்டுதோறும் மெடிசேவ் கணக்கில் இருந்து கட்டலாம்.
வயதுக்கு ஏற்ப சந்தாத் தொகை உயரும். செலவு மிகுந்த சிகிச்சையை அதிகம் பேர் நாடும்போது அந்தத் தொகை வேகமாக உயரும்.
காப்புறுதி நிறுவனம் மற்றும் காப்புறுதித் திட்டத்தைப் பொறுத்து, 80 முதல் 90 வயது வரையிலானவர்களுக்கான சந்தாத் தொகை ஆண்டுக்கு $10,000 வரைகூட உயரலாம். 60 வயது முதல் அந்தத் தொகையை ரொக்கமாகக் கட்டமுடியும்.
இப்படி சந்தாத் தொகை உயரும்போது அதுபற்றி பலரும் யோசிக்கத் தொடங்குவார்கள்
இருப்பதிலேயே செலவு மிகுந்த காப்புறுதித் திட்டத்திற்கு 100 ஆண்டு வாழ்நாளில் ஒருவர் $323,900 வரை செலுத்தக்கூடும் என்றது அமைச்சு.

