முன்னாள் வழக்கறிஞரான எம். ரவி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதை புதன்கிழமை (ஜூலை 17) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
ரவி மாடசாமி என்னும் முழுப்பெயரைக் கொண்ட 55 வயது சிங்கப்பூரரான அவர், நீதிமன்றத்திற்கு கறுப்புநிற டீ-சட்டையில் வந்தார்.
ஒன்பது முறை நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக 2023 நவம்பர் மாதம் 21 நாள் சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.
சில மாதங்கள் கழித்து, முறையற்ற நடத்தை காரணமாக வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
2021 நவம்பர் மாதம் முதல் 2023 செப்டம்பர் மாதம் வரையில் ஒரு சட்ட அலுவலகம், ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஓர் உணவகம் ஆகியன உள்ளிட்ட இடங்களில் ரவி நடந்துகொண்ட விதம் குறித்து நீதிமன்றம் கேட்டறிந்தது.
2023 ஜூலை 9ஆம் தேதி சவுத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோயிலுக்குச் சென்ற ரவி, வரிசையாக நின்றிருந்த பக்தர்களைப் பொருட்படுத்தாமல் முந்திக்கொண்டு முன்னால் சென்றார். விபூதியை எடுத்துப் பூசிக்கொண்ட பின்னர் அதனை தரையில் வீசினார்.
“அதிகமான வெளிநாட்டினர் ஏன் இங்கு இருக்கிறார்கள், எதற்கு இங்கு வரிசை,” என்று கேட்டு அவர் உரக்கக் கத்தினார்.
கோயிலின் உதவிச் செயலாளர் வந்து, கோயிலில் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அப்போது அங்கு நின்றிருந்த அர்ச்சகர் ஒருவரை ரவி தள்ளிவிட்டார். அதன் பின்னர் சிலர் ஒன்றுசேர்ந்து அவரை கோயிலில் இருந்து வெளியேற்றினர்.
தொடர்புடைய செய்திகள்
இதேபோன்ற பல குற்றச்செயல்களில் அவர் அடுத்தடுத்து ஈடுபட்டதை நீதிமன்றம் கேட்டறிந்தது.
ரவிக்கு 18 வாரம் முதல் 24 வாரம் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க அரசுத் தரப்பு கோரி உள்ளது. ஆயினும், ஏழு வாரங்களுக்கு மிகாத சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க ரவியின் வழக்கறிஞர் யூஜின் துரைசிங்கம் கோரி உள்ளார்.
மாவட்ட நீதிமன்ற நீதிபதி லூக் டான், இந்த வழக்கிற்கு மேலும் அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டு தண்டனை விதிப்பை வேறொரு தேதிக்குத் தள்ளிவைத்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் மூன்று முறை தண்டிக்கப்பட்டவர் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.

