பேங்காக்: தாய்லாந்தின் எதிர்த்தரப்பு ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சியைக் கலைப்பது தொடர்பாக ஆகஸ்ட் 7ஆம் தேதி தீர்ப்பு அளிக்க இருப்பதாக அந்நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
‘மூவ் ஃபார்வர்ட்’ தாய்லாந்து நாடாளுமன்றத்தில் ஆகப்பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது. முன்னதாக, மன்னராட்சி குறைகூறப்படுவதற்கு எதிராக அதனைப் பாதுகாக்கும் பொருட்டு சட்டத்திருத்தம் செய்யத் திட்டமிட்டு இருப்பதால் அந்தக் கட்சியைக் கலைக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
ஆனால், தான் எந்தவொரு தவறையும் செய்யவில்லை என்று அந்தக் கட்சி கூறியது.
முடிவெடுப்பதற்கு ஏதுவாகப் போதுமான ஆதாரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுவதாக அது தெரிவித்தது.
எங்களது தற்காப்பு வாதத்தில் நம்பிக்கையுடன் உள்ளோம்,” என்று அக்கட்சியின் தலைவர் சைதாவாட் துலாத்தோன் செய்தியாளர்களிடம் கூறினார்.
2023 மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு மூவ் ஃபார்வர்ட் கட்சியின் தலைவராக இருந்த பிட்டா லிம்ஜாரோன்ராட் களமிறக்கப்பட்டார்.
தேர்தலில் அதிக இடங்கள் கிடைத்தபோதும் தாய்லாந்தின் பிரதமர் ஆவதற்குத் தேவையான பெரும்பான்மை ஆதரவை அவர் பெறத் தவறினார்.

