வர்த்தகக் கட்டடங்களில் இருக்கும் கார் நிறுத்துமிடங்களுக்கான கட்டணத்தை வாகனமோட்டிகள் தானியங்கி முறையில் செலுத்துவதற்கு ஏற்ற புதிய செயலி ஒன்றை ‘ஏஎக்ஸ்எஸ்’ நிறுவனம் புதன்கிழமையன்று (ஜூலை 17) அறிமுகப்படுத்தியது.
‘ஏஎக்ஸ்எஸ் டிரைவ்’ என அழைக்கப்படும் இந்தச் செயலியானது, மின்னியல் கார் நிறுத்துமிட அமைப்பில் உள்ள சிக்கல்கள், பதிவுசெய்யப்பட்ட கடன் அல்லது பற்று அட்டையில் போதிய பணம் இல்லாத காரணத்தால் ஓட்டுநர்கள் தானியங்கி வாயில்களைக் கடக்க முடியாது தவிப்பது போன்ற பிரச்சினைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஓட்டுநரின் பற்று அட்டை அல்லது கடன் அட்டையை அவர்கள் ஓட்டும் வாகனத்தின் உரிம அட்டை எண்ணோடும் இஆர்பி கட்டண அட்டைக் கருவியோடும் (IU) இந்தச் செயலி இணைக்கிறது.
வாகனம் நிறுத்துமிடத்திற்குள் நுழையும், வெளியேறும் நேரங்களைப் பதிவு செய்ய வாகன உரிம அட்டை அங்கீகார அமைப்பை இது பயன்படுத்துகிறது.
வாகனத்தின் உரிம அட்டையோடு இணைக்கப்பட்டிருக்கும் கட்டண அட்டையிலிருந்து நிறுத்துமிடத்திற்கான கட்டணம் எடுக்கப்படும்.
“பதிவு செய்யப்பட்ட கட்டண அட்டையில் போதுமான பணம் இல்லை என்றாலும் தானியங்கி வாயில் திறக்கும். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் நிலுவையில் உள்ள கட்டணத்தைச் செலுத்த பயனருக்கு அறிவிப்புகள் அனுப்பப்படும்.
“கொடுக்கப்பட்ட காலவரையறைக்குள் பயனர் நிலுவைத்தொகையைச் செலுத்தத் தவறினால், கட்டணம் செலுத்தப்படும் வரை அவர்களின் கணக்கு முடக்கப்படும்,” என்று ‘ஏஎக்ஸ்எஸ் பேமண்ட்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குவா சுன் ஹான் கூறினார்.
தற்போது, இந்தச் செயலியை 12 கார் நிறுத்துமிடங்களில் பயன்படுத்தலாம். ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் 100 கார் நிறுத்துமிடங்களில் இதைச் செயல்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

