குறைந்த வருமானமுள்ள 75 குடும்பங்களுக்கு 2022ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மாதந்தோறும் $300லிருந்து $550 வரை ‘எவ்வா’ (AWWA) அமைப்பின் குடும்ப வலுவூட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது.
அந்த நிதியுதவி எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கப்பட்டது.
அக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலை செய்தால் மட்டுமே ரொக்கத்தைப் பெற முடியும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை.
இத்திட்டம் கட்டுப்படுத்தப்பட்ட முன்னோட்டத் திட்டமாக நடத்தப்பட்டது.
இதுவே சிங்கப்பூரில் நடத்தப்பட்ட முதல் நிபந்தனையற்ற ரொக்க நிதியுதவித் திட்டம்.
இதுபோன்ற திட்டங்கள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு, கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது குறைந்த வருமான நியூயார்க் மக்களுக்கு ரொக்கம் வழங்கப்பட்டது.
இந்த வசதி குறைந்த குடும்பங்களுக்கு ரொக்க உதவி வழங்கியதன் மூலம் அக்குடும்பங்களைச் சேர்ந்தோரின் மனநல, வேலைப் பாதுகாப்பு மேம்பட்டதை ‘எவ்வா’ அமைப்பு சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
முன்னோட்டத் திட்டம் மூலம் கிடைத்த கண்டுபிடிப்புகள் ஜூலை 17ஆம் தேதியன்று பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள ‘எவ்வா’ இல்லம் மற்றும் பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தில் வெளியிடப்பட்டன.
‘எவ்வா’ நடத்திய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொண்டார்.
அவருடன் அவருடைய மனைவி திருவாட்டி ஜேன் இத்தோகியும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இருவரும் திட்டத்தின் மூலம் பலனடைந்தோரைச் சந்தித்துப் பேசினர்.
ரொக்க உதவிக்குத் தகுதி பெற, குடும்பங்களின் தனி நபர் மாதச் சம்பளம் $1,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். அல்லது குடும்பத்தின் மொத்த மாத வருமானம் மத்திய சேமநிதிக் கழிவுக்கு முன்பு $3,600 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.


