மூக்குக் கண்ணாடி நிறுவனத்தில் $255,000 கையாடிய முன்னாள் வர்த்தக மேம்பாட்டு இயக்குநருக்கு ஜூலை 18ஆம் தேதி 14 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
லக்சோட்டிகா எஸ்இஏ நிறுவனத்தில் பணியாற்றிய தாய்லாந்து நாட்டவரான சுரானகாபான் பலிட், 48, ஆண்டுக்கு ஏறக்குறைய S$156,000 சம்பளம் பெற்று வந்தார்.
இம்மாதம் 9ஆம் தேதி $207,000க்கு மேற்பட்ட தொகையை நம்பிக்கை மோசடி செய்த இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார்.
2018 அக்டோபர் 26 முதல் 2019 அக்டோபர் 22 வரை நிறுவனம் வழங்கிய கடன் அட்டையைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக பணம் எடுத்தது மட்டுமல்லாமல் தனது செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார். அவற்றின் மதிப்பு S$97,000.
2020 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 21 வரை $110,000க்கும் மேற்பட்ட ரொக்கத்தொகையை அவர் இதே போன்று கையாடியிருக்கிறார்.
நீதிமன்றத்தில் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் இங் ஷாவோ யான், வேலை தொடர்பான பொழுதுபோக்கு மற்றும் பயணச் செலவுக்காக அந்த கடன் அட்டை அவருக்குக் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
திரு சுரானகாபான், 2020 மார்ச் 4ஆம் தேதி சிங்கப்பூரை விட்டு வெளியேறினார். இதையடுத்து அவரை நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியது.
உள்கட்டுப்பாட்டு முறைகளை ஆராய்ந்ததில் அவரது மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2020 நவம்பர் 24ஆம் தேதி அந்நிறுவனத்தின் மனிதவள இயக்குநர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் 21ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பிய அவரை காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது.

