சிங்கப்பூர் வர்த்தகங்களுக்கு 2023ஆம் ஆண்டு, அதற்கு ஈராண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய புரிதல் அதிகம் இருந்தது.
அத்துடன், அவை தடையற்ற வர்த்தங்கள் மூலம் 2023ஆம் ஆண்டு, அதற்கு ஈராண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைவிட, அதிகப் பயனடைந்துள்ளன. அதனை தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு காட்டுகிறது.
அந்த ஆய்வு சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் 2023ஆம் அக்டோபர் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தியது. இந்த ஆய்வில் பல்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட வர்த்தகங்கள் பங்கேற்றன. இதனுடன், எல்லைதாண்டிய வர்த்தகம், முதலீடு தொடர்பில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றித் தெரிந்துகொள்ள, தனித்தனி குழுக்கள் பங்கேற்ற கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
இந்த ஆய்வில் பங்கேற்ற 85 விழுக்காட்டினர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றி 2023ஆம் ஆண்டு அறிந்திருந்தது தெரியவந்தது. இதுவே, 2021ஆம் ஆண்டு 62 விழுக்காடாக இருந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன், 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 73 விழுக்காடு வர்த்தகங்கள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் தாங்கள் பயன்பெற்றதாக தெரிவித்தன. இதுவே, 2021ஆம் ஆண்டு இதில் பாதி அளவு நிறுவனங்களே பயன்பெற்றதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதில் கடந்த மூன்றாண்டுகளில் 81 விழுக்காடு நிறுவனங்கள் ‘ஆசியான் டிரேட் இன் கூட்ஸ் அக்ரிமண்ட்’ என்ற தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் தாங்கள் பயனடைந்ததாக விளக்கின. அதுபோல், ஆசியான்-சீனா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் 41 விழுக்காடு வர்த்தகங்கள் தாங்கள் பலனடைந்ததாக கூறின.
மேலும், நடைமுறைக்கு வந்துள்ள வட்டார தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிக் கூறும்போது 43 விழுக்காடு நிறுவனங்கள் தாங்கள் வட்டார ஒட்டுமொத்த பொருளியல் பங்காளித்துவ (Regional Comprehensive Economic Partnership) தடையற்ற ஒப்பந்தத்தை குறிப்பிட்டு அதுவே மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாகக் கூறின. இதேபோல், 38 விழுக்காட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்த, முற்போக்கு ஒப்பந்தம் அல்லது பசிபிக் வட்டார பங்காளித்துவம் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) என்ற தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் தாங்கள் பயன்பெற்றதாக தெரிவித்தன.

