சிங்கப்பூரில் $19 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை ஏமாற்றி மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் 665 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜூலை 19) தெரிவித்தது.
அவர்களில் 413 பேர் ஆண்கள், எஞ்சிய 252 பேர் பெண்கள். அனைவரும் 15 முதல் 79 வயது வரையிலானவர்கள் என்று காவல்துறை கூறியது.
இவர்கள், 3,600க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
நண்பரைப் போல போலியாக நடிப்பது, மின் வர்த்தகம், முதலீடு, வேலை வாய்ப்பு, இணையக் காதல் உள்ளிட்ட மோசடிகளில் அவர்கள் பலரை ஏமாற்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஜூலை 5 முதல் ஜூலை 18ஆம் தேதி வரை வர்த்தக விவகாரப் பிரிவு, ஏழு போலிஸ் நிலையங்கள் ஆகியவற்றின் அதிகாரிகள் இரு வாரம் மேற்கொண்ட சோதனையில் இவர்களுடைய மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஏமாற்றிய குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப் படலாம். கள்ளப் பணத்தை நல்லப் பணமாக மாற்றும் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் சிறை, $500,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
உரிமம் இல்லாது கட்டணம் வசூல் செய்யும் சேவைகளை வழங்கும் குற்றச் செயலுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது $125,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இருப்பவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று காவல்துறை எச்சரித்தது.
தொடர்புடைய செய்திகள்
யாராவது வங்கிக் கணக்குகளை அல்லது கைப்பேசியை பயன்படுத்த அனுமதி கேட்டால் அவற்றை புறக்கணிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.