பொய்யான கோரிக்கைகளைச் சமர்ப்பித்த ஆறு மருந்தகங்கள் மீது நடவடிக்கை

பொய்யான கோரிக்கைகளைச் சமர்ப்பித்த ஆறு மருந்தகங்கள் மீது நடவடிக்கை

2 mins read
2562830f-1cd1-423a-8353-2d912006992f
படம்: - ஃபேஸ்புக்

நோயாளிகள் சார்பில், ‘மெடிசேவ்’, ‘சாஸ்’, ‘மெடிஷீல்டுலைஃப்’ ஆகிய திட்டங்களின்கீழ் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க ஆறு மருந்தகங்களுக்குச் சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.

அந்த மருந்தகங்கள் பொய்யான பல கோரிக்கைகள் சமர்ப்பித்ததை அமைச்சு கண்டறிந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அது தெரிவித்தது.

பின்வரும் மருந்தகங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி முதல் மேற்கூறிய திட்டங்களில் பங்கேற்பதிலிருந்து விதிக்கப்பட்ட தடை நடைமுறைக்கு வரும் என இது தொடர்பாக அமைச்சு ஜூலை 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

731 அங் மோ கியோ அவென்யூ 6, 50A சுவா சூ காங் லூப் ஆகிய இடங்களில் இயங்கும் ‘லைஃப் ஃபேமிலி’ மருந்தகம் (Life Family Clinic), 501 வெஸ்ட் கோஸ்ட் டிரைவ், 531 அங் மோ கியோ அவென்யூ 10 ஆகிய இடங்களில் செயல்படும் லோ & லோ மருந்தகம் & அறுவை சிகிச்சை (Loh & Loh Clinic & Surgery), லோ& லோ பல் மருந்தகம் & அறுவை சிகிச்சை (Loh & Loh Dental Surgery) ஆகிய ஆறு மருந்தகங்கள் அதில் அடங்கும்.

பொய்யான கோரிக்கைகள் அந்தந்த மருந்தகங்களில் முக்கிய அலுவலக பணியாளர்களால் அனுப்பப்பட்டதாக அமைச்சு கூறியது.

லைஃப் ஃபேமிலி மருந்தகத்தின் மருத்துவர் லிம் கிம் ஷோ, லோ & லோ மருந்தகம் & அறுவை சிகிச்சை, லோ& லோ பல் மருந்தகம் & அறுவை சிகிச்சை ஆகிய இரண்டின் மருத்துவர் மோசஸ் லோ ஜிங் லூங் ஆகியோரின் மெடிசேவ் மற்றும் மெடிஷீல்டு லைஃப் அங்கீகாரங்கள் ரத்து செய்யப்படும் என அது சொன்னது.

அதாவது ஜூலை 24ஆம் தேதி முதல் அந்த இரு மருத்துவர்களாலும் செய்யப்படும் சிகிச்சைகள், நடைமுறைகள் இனி ‘மெடிசேவ்’, ‘சாஸ்’, ‘மெடிஷீல்டுலைஃப்’ கோரிக்கைகளுக்குத் தகுதிபெறாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், சிங்கப்பூர் மருத்துவ மன்றம் (SMC) வழங்கிய பயிற்சிச் சான்றிதழின் மூலம் நோயாளிகளுக்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கலாம் எனக் கூறப்பட்டது.

இரு மருத்துவர்களும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறு அமைச்சு கேட்டுகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்