சிங்கப்பூர் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தனது 95 சமூக ஊடகக் கணக்குகளில் பதிவு செய்து வந்தார் சீனத் தொழிலதிபர் ஒருவர்.
இதன் தொடர்பில் சிங்கப்பூர் அதிகாரிகள் அந்தத் தொழிலதிபரின் சமூக ஊடகக் கணக்குகளை மூட வெள்ளிக்கிழமை (ஜூலை 19) அன்று உத்தரவிட்டனர்.
இது குறித்து சனிக்கிழமை (ஜூலை 20) அன்று செய்தியாளர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், யூடியூப், எக்ஸ் தளங்களைப் பார்வையிட்டனர். அப்பொழுது அந்தக் கணக்குகள் யாவும் மூடப்பட்டது அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
ஃபிக்கா எனப்படும் வெளிநாட்டினர் தலையீட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் உள்ளூர் பயனாளர்கள் பார்க்க முடியாதபடி உள்துறை அமைச்சு முதல் முதலாக இப்பொழுதுதான் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தக் கணக்குகள் யாவும் கோ வெங்குவி என்ற, தன்னை சுயமாக சீனாவிலிருந்து நாடு கடத்திக்கொண்ட தொழிலதிபரின் கணக்குகள் என்று கூறப்படுகிறது. இவர் சீன கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிப்பவர் என்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளின் பேரில் தண்டிக்கப்பட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவருடைய சமூக ஊடகப் பதிவுகளில் சிங்கப்பூரின் நான்காம் தலைமுறை தலைவர் தேர்வு செய்யப்பட்டதில் சீனாவுக்கு பங்குள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோ வான் குவோக், மைல்ஸ் கோ, மைல்ஸ் குவோ எனப் பல பெயர்களைக் கொண்ட கோ, ஜூலை 16ஆம் தேதி அமெரிக்காவில் இணையவாசிகளிடமிருந்து பல நூறு மில்லியன் டாலர்களை மோசடியாகப் பெற்றதற்காக தண்டிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஏழு வார காலம் நீடித்த வழக்கு விசாரணையில் அவர் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில் ஒன்பதில் குற்றவாளி என அவருக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது.