இணைய இடையூறுக்கு எதிராக அமைதிக் காலத்திலேயே முறியடிப்பு திட்டங்கள்: ஜோசஃபின் டியோ

2 mins read
b6fa0c2c-14f3-4092-8a40-446ae0377c0f
நமது செயல்பாடுகளில் தவறு ஏற்படக்கூடும் என்பதால் அதற்கு எதிராக நாம் பாதுகாப்பு முறைகளை அமைப்பதுடன் அதற்கான திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினார் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மையில் ஏற்பட்ட இணைய இடையூறு போன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திட்டங்கள் பெரும்பாலும் அமைதிக் காலங்களிலேயே, எல்லாம் நன்கு செயல்பட்டிருக்கும் நேரங்களில் வகுக்கப்படுகின்றன என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

அமைதிக் காலங்களில்தான் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அத்துடன், நமது செயல்பாடுகளில் பெரும் தவறு ஏற்படக்கூடும் என்பதால் அவற்றை எதிர்கொள்ள திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்று அமைச்சர் டியோ தமது ஃபேஸ்புக் பதிவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21ஆம் தேதி) அன்று கூறினார்.

“எல்லாம் ஒருவாறு நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் நாம் நமது தற்காப்பு அரண்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறிய அமைச்சர், அரசாங்கம் தனது கட்டமைப்புகளை அடிக்கடி நெருக்கடி சோதனைக்கு உட்படுத்துவதாகத் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 19) அன்று ஏற்பட்ட இணைய இடையூறு கிரவுட்ஸ்டிரைக் என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் மென்பொருள் மேம்பாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்டது. அது மைக்ரோசாஃப்ட் சாதனங்களைப் பயன்படுத்தும் கிட்டத்தட்ட 8.5 மில்லியன் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இது ‘விண்டோஸ்’ சாதனங்களைப் பயன்படுத்தும் 1 விழுக்காட்டினருக்கு சமம் என்றும் கூறப்படுகிறது.

உலகளவில் விமானச் சேவை நிறுவனங்கள், வங்கிகள், ஊடகங்கள், என பலதரப்பட்ட நிறுவனங்கள் தங்கள் சேவைக்கும் நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தன. சிங்கப்பூரைப் பொறுத்தவரை சாங்கி விமான நிலையச் சேவைகள், சிங்கப்பூர் சிங்போஸ்ட் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாயின.

எனினும், சிங்கப்பூர் அரசாங்க சேவைகள், உள்ளூர் வங்கி, தொலைத்தொடர்பு, மருத்துவமனைச் சேவைகள் போன்றவை பாதிக்கப்படவில்லை என்று மின்னிலக்க மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சு வெள்ளிக்கிழமையன்று விளக்கமளித்தது.

இணைய இடையூறால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் நிறுவனங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட முற்றிலும் மீண்டெழுந்துவிட்டதாக அமைச்சர் டியோ தமது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

“இருப்பினும் இந்த நிகழ்வு பலரும் தாங்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்ற எண்ணத்தையும் அன்றாட நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்பத்தை இந்த அளவு நம்பியிருக்க வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளதாக அவர் சொன்னார்.

இது குறித்து நாம் கவலைப்பட வேண்டும். இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால், இதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதே என்று அமைச்சர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வதில் முதல்படியாக அடிக்கடி தற்காப்பு அரண்களை வலுவாக்கும் விதமாக சோதனைகளை மேற்கொள்வதுடன் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு பாதுகாப்பு அம்சங்களை இணைத்திட வேண்டும் என்றும் அமைச்சர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்