திருவாட்டி ஆர் என்று மட்டும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இந்தோனீசிய மாது தற்பொழுது அறுபது வயதுப் பருவத்தில் இருக்கிறார்.
இவர் தமது பேரக்குழந்தைகளை அவர்களின் சிறுவயதில் இருந்தே பராமரித்து வருகிறார்.
இவரது சிங்கப்பூர் மருமகன் சிறைத்தண்டனை பெற்று தனது குழந்தைகளை விட்டுப் பிரிந்து வாழ்கிறார். குழந்தைகளின் தாயார் நாடு கடத்தப்பட்டு இந்தோனீசியா திரும்பியுள்ளார்.
திருவாட்டி ஆர் 2022ஆம் ஆண்டு கீழே விழுந்ததால் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டு அதனால் அவரது நடமாட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலையும் பார்த்துக்கொண்டு தமது பேரக்குழந்தைகளையும் கவனிக்க முடியுமா என்ற கவலை அவருக்கு எழுந்ததாகக் கூறுகிறார் சவுத் சென்ட்ரல் சமூக மன்றத்தின் சமூக குடும்ப சேவை நிலையத்தின், ‘இங்குளுசிவ் ஃபண்ட்’ (South Central Community Family Service Centre’s [FSC] The Inclusive Fund.) என்ற நிதியை நிர்வகிக்கும் திருவாட்டி கனக் முச்சால் என்பவர்.
திருவாட்டி ஆர் தமது மருத்துவக் கட்டணங்களைக் கட்டுவதிலும் சிரமங்களை எதிர்கொண்டார்.
வெளிநாட்டவர் என்பதால், சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் அரசாங்க பொது மருத்துவமனைகளில் கிடைக்கும் மருத்துவ மானியங்கள் அவருக்குக் கிடைப்பதில்லை. நல்லவேளையாக, சவுத் சென்ட்ரல் சமூக மன்றத்தின் சமூக குடும்ப சேவை நிலையத்தின், ‘இங்குளுசிவ் ஃபண்ட்’ அவருடைய உதவிக்கு வந்தது. அவருக்கு பாத்தாமில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கான கட்டணத்தை அந்த நிதி ஏற்றுக்கொண்டது.
அத்துடன், அந்த நிதி நிர்வாகம் மவுண்ட் அல்வேர்னியா மருத்துவமனையின் சமூக வெளித்தொடர்பு குழுவுடன் (Mount Alvernia Hospital Community Outreach Team), தொடர்புகெண்டு அந்த மருத்துவமனையின் வெளிநாட்டைச் சேர்ந்த தம்பதியருக்கு உதவும் திட்டத்தின்கீழ் பெருமளவு மானியத்துடன் கூடிய ஆரம்பக்கட்ட சிகிச்சை திருவாட்டி ஆருக்கு வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் வெளிநாட்டினரைக் கொண்ட குடும்பங்களில் பெரும்பாலும் சிங்கப்பூர் ஆடவர் ஒருவருக்கு வெளிநாட்டுப் பெண்மணி மனைவியாகவும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் உறுப்பினர்களாகவும் இருப்பர் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி ஆருக்கு முதுகுத் தண்டில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு லாப நோக்கமில்லா மருத்துவமனையாக விளங்கும் மவுண்ட் அல்வேர்னியா மருத்துவமனையில் பலவிதமான மருத்துவ சோதனைகளுக்குப் பின் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் $26,000 என்றாலும் அந்த மருத்துவமனையும் சிகிச்சையளித்த மருத்துவர்களும் தங்கள் கட்டணத்தை விட்டுக்கொடுத்தனர்.
இதற்கிடையில், புரோ போனோ எஸ்ஜி (Pro Bono SG) என்ற உதவி தேவைப்படுவோருக்கு இலவச சட்ட உதவி வழங்கும் தொண்டு நிறுவனம் திருவாட்டி ஆர் சிங்கப்பூரில் நீண்டநாள் தங்கி தமது பேரக்குழந்தைகளை பராமரிக்க ஏதுவாக அவருக்கு நீண்டநாள் அனுமதி அட்டை பெற்றுத்தர உதவி வருகிறது.

