உணவுப்பொருள்களைச் சோதித்து, அவை தரநிலைகளை எட்டியுள்ளனவா என்பதைப் பரிசோதிப்போரை வழிநடத்துகிறார் மூத்த நிர்வாகி விஷ்ணு கருப்பையா தாண்டவம்.
உணவுப்பொருள்கள் சட்டப்படி தருவிக்கப்பட்டதையும் உணவு விற்கும் கடைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதையும் திரு விஷ்ணுவும் அவருடைய அணியினரும் உறுதிசெய்கின்றனர்.
பணியிலும் திறன் மேம்பாட்டிலும் கொண்டிருந்த கடப்பாட்டிற்காக திரு விஷ்ணுவுக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பொதுச்சேவை விருது வழங்கப்பட்டது.
பொதுச்சேவை வாரத்தை ஒட்டி ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் இவரையும் சேர்த்து மொத்தம் 100 பேருக்கு வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
சிங்கப்பூரின் பொதுச்சேவையிலுள்ள 16 அமைச்சுகளிலும் 50க்கும் மேற்பட்ட அரசாங்க ஆணை பெற்ற கழகங்களிலும் ஏறத்தாழ 152,000 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.
தொடக்கத்தில் உணவு, பானத்துறையில் பணியாற்றிய திரு விஷ்ணு, தேசிய சுற்றுப்புற வாரியத்திலும் முன்னாள் சிங்கப்பூர் வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்திலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
வேலை நீண்ட நேரம் நீடித்தாலும் எப்பாடுபட்டேனும் திறனை மேம்படுத்த வேண்டும் என எண்ணி, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் ‘ஜூரிஸ் டாக்டரேட்’ எனப்படும் முதுநிலை சட்டக் கல்வியைத் திரு விஷ்ணு மேற்கொண்டார்.
“வேலை பார்த்துக்கொண்டே படிப்பது சில நேரங்களில் சிரமமாக இருந்தபோதும் நேரத்தைச் சரியாக வகுத்துக்கொண்டு சமாளித்தேன்,” என்றார் திரு விஷ்ணு. சட்டம் படித்ததன் மூலம் தகுந்த முறையில் நடவடிக்கை எடுப்பதற்கான மேம்பட்ட அறிவுத்திறனைத் தான் பெற்றிருப்பதாக அவர் கருதுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
திரு விஷ்ணு தற்போது சிங்கப்பூர் உணவு அமைப்பின் அடிப்படைச் சட்டப் பயிற்சி வகுப்பில் பயிற்றுவிப்பாளராகச் செயலாற்றுகிறார். வருங்காலத்தில் வழக்கறிஞராகத் தகுதிபெற்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் வழக்கறிஞராகச் செயல்பட விரும்புவதாகவும் இவர் கூறினார்.
“இருக்கும் வேலை பெரிதாக இருந்தாலும் நம் கனவுகளைக் கைவிடவேண்டாம். அடி மேல் அடி வைத்தால் அம்மியையும் நகர்த்தலாம்,” என்கிறார் இவர்.

