சிங்கப்பூரும் மலேசியாவும் நெருக்கமான ஆனால் இயல்பாகவே சிக்கலான உறவைக் கொண்டுள்ளன.
இரு அண்டை நாடுகளும் ஒவ்வொரு விவகாரத்திலும் எப்போதும் உடன்படவில்லை என்றாலும், அவை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன.
ஏனெனில், இருதரப்பிலும் தலைவர்கள் பொதுவாக சின்னஞ்சிறு அம்சங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, எந்தெந்த விவகாரங்களில் கவனம் செலுத்தினால் ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற பரந்த கண்ணோட்டத்தில் செயல்பட்டு வந்துள்ளதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
மலேசியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட அவர், கோலாலம்பூர் வணிக மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) உரையாற்றினார்.
இந்த சிக்கலான உறவாலேயே, இரு நாட்டுத் தலைவர்களும் அரசாங்கங்களும் ஓர் உத்திபூர்வ கண்ணோட்டத்தை முன்னெடுத்து, ஒட்டுமொத்த உறவின் பார்வையில் விவகாரங்களை உணர்வு ரீதியாக நிர்வகிக்க வேண்டியுள்ளது என திரு லீ தெரிவித்தார்.
“சிரமங்களையும் இடர்பாடுகளையும் பற்றி அவர்கள் அறிந்திருப்பதோடு, அதே வேளையில் விழிப்புடன் இருந்து அவற்றை சமாளித்து ஒன்றிணைந்து செயல்பட்டால் மிகப் பெரிய அளவில் லாபம் ஈட்டலாம்,” என்றார் திரு லீ.
இந்த உறவு ஏன் சிக்கலானது என்பதற்கு மையமாக இருப்பது, கடினமான சூழலில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து, அதன் பின்னர் ஏற்பட்ட பிரிவினை இரு தரப்பினருக்கு அதிர்ச்சியாகவும் அந்தத் தலைமுறை சிங்கப்பூரர்களுக்கும் மலேசியர்களுக்கும் மறக்கமுடியாததாகவும் இருந்ததே.
“உணர்ச்சிகள் தணிந்தாலும், நமது உறவை சிக்கலாக்கும் அடிப்படை பிரச்சினைகள் நீங்கிவிடவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இரு சமுதாயங்களும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு உள்ளதையும் அவர் சுட்டினார். சிங்கப்பூரில் பெரும்பான்மை இனத்தவராக சீனர்களும் சிறுபான்மையினராக மலாய்க்காரர்களும் மற்றவர்களும் உள்ளனர்.
மலேசியாவில் பெரும்பான்மை இனத்தவராக மலாய்க்காரர்களும் சிறுபான்மையினராக சீனர்களும் மற்றவர்களும் உள்ளனர்.
எனவே, பல இன சமூகங்களை உருவாக்க அவை முற்றிலும் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளதாக திரு லீ சொன்னார்.
இரு சமுதாயங்களின் அமைப்புமுறை வேறுபட்டிருப்பது ஒருபுறமிருக்க, வெற்றிக்கான தீர்வுகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாத கடினமான இருதரப்புப் பிரச்சினைகள் உள்ளதையும் அவர் சுட்டினார்.
இந்த உறவு இயல்பாகவே உணர்வுபூர்வ மிக்கதாகவும் சிக்கலானதாகவும் இருப்பதற்கு சில காரணங்கள் இருந்தாலும், இரு நாடுகளுக்கும் வேறு மாற்று எதுவும் இல்லாததால் இருதரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை அறிந்துள்ளன என்று கூறினார் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்.

