தலைமைத்துவப் பண்பை வளர்த்துக்கொண்ட 17 வயது ஜெப்ரிக்கு அதிபர் விருது

தலைமைத்துவப் பண்பை வளர்த்துக்கொண்ட 17 வயது ஜெப்ரிக்கு அதிபர் விருது

3 mins read
ef2eb46c-96b6-4e04-89af-bb539bfc0721
அதிபர் தர்மன் சண்முகரத்னம் (வலமிருந்து 2வது) மற்றும் தமது பெற்றோருடன் டி. ஜெப்ரி சாமுவேல். - படம்: சிங்கப்பூர் சிறுவர் படை
multi-img1 of 2

ராஃபிள்ஸ் கல்விநிலையத்தில் 60வது சிங்கப்பூர் சிறுவர் படைப்பிரிவின் மூத்த பயிற்சி லெப்டினென்டாக இருக்கும் டி. ஜெப்ரி சாமுவேல், 17, தமது தலைமைத்துவத்தின்வழி மாற்றத்தை ஏற்படுத்துவதில் உறுதியாகவுள்ளார்.

சிங்கப்பூர் சிறுவர் படையின் (Boys Brigade) ஆக உயரிய விருதான அதிபர் விருதை, இவ்வாண்டு பெற்ற ஒன்பது பேரில் ஜெப்ரியும் ஒருவர்.

இருபதாவது முறையாக வழங்கப்பட்ட அதிபர் விருது, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைத்துவத்திலும் சமூக சேவையிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருபவர்களுக்‌கு வழங்கப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) பிற்பகல் 3.30 மணிக்‌கு இஸ்தானாவில் நடந்த விருதளிப்பு நிகழ்ச்சியில் இவர்களுக்‌கு விருது வழங்கிச் சிறப்பித்தார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.

கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து சிறுவர் படை உறுப்பினராகச் செயல்பட்டுவரும் ஜெப்ரி, கடந்த ஆண்டு தலைமை ‘பிரைமர்’ ஆகவும் பணியாற்றினார். பல்வேறு குழுக்களில் முக்கியப் பங்காற்றுவது, பணிகளை நிர்வகிப்பது, ஆசிரியர்கள், அதிகாரிகள், தொகுதி உறுப்பினர்களுடன் தொடர்பை உறுதிசெய்வது, தமது தொகுதியைத் தயார்செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் சுமுகமாக இடம்பெறுவதைக் கண்காணிப்பது முதலிய பொறுப்புகளை ஏற்று, சிறப்பாகச் செய்துமுடித்துள்ளார்.

சில மூத்த மாணவர்களின் ஊக்‌கத்தால் உயர்நிலை ஒன்றில் பயின்றபோது சிறுவர் படையில் சேர்ந்த ஜெப்ரி, இன்றுவரை தமது பயணம் மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

“கீழ்ப்படிதல், பணிவு, ஒழுக்கம், சுயமரியாதை போன்ற பண்புகளுக்குச் சிறுவர் படையில் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார்கள்,” என்று கூறினார் ஜெப்ரி. அதற்கேற்ப தான் நடப்பதோடு, இளையர்களை ஊக்‌கப்படுத்தவும் உத்வேகப்படுத்தவும் தொடர்ந்து முயன்றதாக அவர் சொன்னார்.

தன் வழிகாட்டுதலின்படி, சிறுவர் படையிலுள்ள இளையர்கள் ஏதேனும் புதிய திறனை கற்றுக்கொள்ளும்போது அல்லது தங்களை மேம்படுத்திக்கொள்ளும்போது தனக்‌குப் பெருமையாக இருப்பதாகச் சொன்னார்.

“ஒரு நாள் இளம் மாணவர் ஒருவர், என்னிடமிருந்து கற்றுக்கொண்ட அனைத்தையும் பற்றி ஒரு தாளில் எழுதி என்னிடம் கொடுத்தார். அதனைப் படித்தபோது நான் மற்றவர்கள் மீது ஏற்படுத்திய ஒரு தாக்கத்தை உணர்ந்தேன்,” என்றார் அவர்.

விடுமுறையின்போது செயின்ட் ஆண்ட்ரூஸ் வெளிநாட்டு ஊழியர் மருத்துவ நிலையத்தில் தொண்டூழியராகவும் ஜெப்ரி பணியாற்றியுள்ளார். மருந்துகளை அடுக்கி வைத்ததோடு, தமிழ் ஊழியர்களிடம் மருத்துவ ஊழியர்கள் சொல்வதை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கவும் உதவி செய்தார் அவர்.

“அதிபர் விருது கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

“இந்த விருது நான் என்மேல் வைத்திருக்கும் தன்னம்பிக்கைக்‌கும், எனது வளர்ச்சிக்‌கும் சான்றாக அமைகிறது என்று நம்புகிறேன். மேலும், என்னுடைய பெற்றோர், அக்கா, நண்பர்கள் அளித்த ஆதரவுக்‌கும் இது ஓர் அடையாளம்,” என்றார் ஜெப்ரி.

தன்னைப்போல் தலைமைத்துவப் பொறுப்பேற்க விரும்பும் இளையர்கள் விடாமல் முயற்சி செய்ய வேண்டும் என்பது இவரது அறிவுரை.

“முயற்சி செய்யாவிட்டால் உங்களுக்‌குள் இருக்‌கும் திறமையை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது. எந்தச் சவாலாக இருந்தாலும் அதனைக் கடந்துசெல்ல கண்டிப்பாக ஒரு வழியிருக்‌கும் என்பது சிறுவர் படையில் நான் கற்றுக்கொண்ட பாடம்,” என்றார் ஜெப்ரி.

அடுத்த ஆண்டு தேசிய சேவையாற்றவுள்ளார் ஜெப்ரி. அதற்குப் பிறகு எதிர்காலத்தில் மீண்டும் சிங்கப்பூர் சிறுவர் படையில் சேர்ந்து, தனக்‌குத் தெரிந்தவற்றை அடுத்த தலைமுறையினருக்‌குக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்பது இவரது விருப்பம்.

குறிப்புச் சொற்கள்