இருநாடுகளுக்கும் பலனளிக்கும் அம்சங்களில் தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சிங்கப்பூரும் பிலிப்பீன்சும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
புரிந்துணர்வு குறிப்பில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹெனும் பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சர் கில்பெர்ட்டோ டியோடோரோவும் ஜூலை 24ஆம் தேதியன்று கையெழுத்திட்டனர்.
ராணுவக் கல்வி, பயங்கரவாத தடுப்பு போன்றவற்றில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்ட மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்த புதிய புரிந்துணர்வு குறிப்பு கையெழுத்திடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்-பிலிப்பீன்ஸ் இடையிலான இருதரப்பு உறவு தொடங்கி 2024ஆம் ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.
கடந்த மே மாதம் பிலிப்பீன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியர் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டார்.
ஷங்ரிலா கலந்துரையாடலில் அவர் உரையாற்றினார்.
ஆசியாவின் உயரிய தற்காப்பு உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய முதல் பிலிப்பீன்ஸ் அதிபர் எனும் பெருமை அவரைச் சேரும்.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் லாரன்ஸ் வோங்கை திரு மார்கோஸ் இஸ்தானாவில் சந்தித்துப் பேசினார்.
மின்னிலக்கப் பொருளியல், கரிமப் புள்ளிகள் (carbon credits), புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி போன்ற துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படக்கூடிய வழிவகைகள் பற்றி இருவரும் கலந்துரையாடினர்.
இதற்கிடையே, ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய தற்காப்பு உறவை டாக்டர் இங்கும் திரு டியோடோரோவும் மறுஉறுதி செய்துகொண்டதாகத் தற்காப்பு அமைச்சு கூறியது.
ஆசியான் தற்காப்பு அமைச்சர்களுக்கான கூட்டங்கள் (ஏடிடிஎம்) மற்றும் ஏடிடிஎம் பிளஸ் கூட்டங்கள் ஆகியவற்றில் தங்கள் ஒத்துழைப்பைத் தொடர இருவரும் உறுதி அளித்தனர்.

