உள்நாட்டு பாதுகாப்புத் துறை:பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான 7 அம்சங்கள்

3 mins read
1a9e80b1-a2d1-4dfd-926b-f629d4101e26
மே மாதம் 17ஆம் தேதி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வன்முறையுடன் கூடிய சித்தாந்தத்தினால் உந்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் சுய தீவிரவாத போக்குடைய ஆடவர் ஜோகூரின் உலு திராம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினார். இதில் இரு காவல் துறை அதிகாரிகள் மரணமடைந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பயங்கரவாதம் தொடர்பாக தனது ஆண்டறிக்கையில் எச்சரித்துள்ளது.

அதில் சிங்கப்பூருக்கு எதிராக உடனடியாக தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று எவ்வித அறிகுறியும் இல்லை என்றபோதிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் உயர்நிலையில் இருப்பதாகக் கூறியது.

அந்த ஆண்டறிக்கையில் ஏழு முக்கிய அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.

1. அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனர்களுக்கு இடையிலான போர் நீண்டநாள்களாகவே இருந்து வருகிறது. இது அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

2. உலக பயங்கரவாதப் போக்கில் இஸ்லாமிய பயங்கரவாதம் முன்னிற்கிறது.

இதில் குறிப்பாக, ஈராக், சிரியாவிலுள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தலாக இருந்து வருவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தலைமைத்துவம் குறைந்துள்ளது, நிதிப் பிரச்சினைகள் போன்றவை இருந்தாலும் அந்த அமைப்பும் அதன் தொடர்புடைய அமைப்புகளும், போர் நடக்கும் பகுதிகளில் மட்டுமல்லாது அதைத் தாண்டி மற்ற பகுதிகளிலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் திறனுடன் இருக்கின்றன.

3. தென்கிழக்கு ஆசியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக விளங்கி அதன் தாக்கம் தொடர்கிறது.

மே மாதம் 17ஆம் தேதி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வன்முறையுடன் கூடிய சித்தாந்தத்தினால் உந்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் சுய தீவிரவாதப் போக்குடைய ஆடவர் ஜோகூரின் உலு திராம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினார்.

அந்தச் சம்பவத்தில் இரு காவல்துறை அதிகாரிகள் மரணமடைந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்தார்.

4. சிங்கப்பூரில் சுய தீவிரவாதப் போக்கே முக்கியமான அச்சுறுத்தல்

சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 52 சுயமாக தீவிரவாதப் போக்கை தழுவியர்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஆணை பிறப்பித்துள்ளது. இவர்களில் 40 பேர் சிங்கப்பூரர்கள்.

அதில் 13 பேர் 20 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்கள் என்று துறை விளக்கியது. இதில் குறிப்பாக, இளையர்களிடையே, சுய தீவிரவாதப் போக்கு கவலையளிக்கும் அம்சமாக விளங்குகிறது.

5. 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சுய தீவிரவாதப் போக்குடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது.

இதில் இருவர் 14, 16 வயது பதின்ம வயது ஆடவர்கள். மூன்றாமவர், 33 வயது மாது. மூவருக்கும் துறை கட்டுப்பாட்டு ஆணை பிறப்பித்தது.

6. பயங்கரவாதத்துக்கு எதிராக பொதுமக்கள் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

பயங்கரவாதச் சம்பவங்கள் நடப்பதற்கு முன்னர் அவற்றை முறியடிப்பதோ அல்லது சுய தீவிரவாதப் போக்குடையவர்கள் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்னரோ அவர்களை அடையாளம் காண்பது முடியாது என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.

“சிங்கப்பூருக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது, அந்தத் தாக்குதல் வெற்றிகரமாக அமையக்கூடும் என்பதை உணர்ந்து பொதுமக்கள் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்,” என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.

7. பயங்கரவாத சம்பவங்கள் நடக்கலாம் என்ற சந்தேகம் தோன்றினால், உடனடியாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அவசர தொலைபேசி எண் 1800-2626-473 (1800-2626-ISD)ல் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்