பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கவிதை விழாவில் இந்த ஆண்டு தொடர் கவிதை வாசிப்பு பல்வேறு அங்கங்களாக இடம்பெறுகின்றன. மூன்று நாள்களில் நடைபெறும் 19 நிகழ்ச்சிகளில் மூத்த கவிஞர்கள் முதல் இளம் கவிஞர்கள் வரை 200க்கும் அதிகமான கவிஞர்கள் கவிதை படைக்கிறார்கள்.
சிங்கப்பூரின் தேசிய மொழிக் கவிதைகளுக்கு பரவலான அறிமுகத்தைப் பெற்றுத்தருவதோடு, சிங்கப்பூர் கவிஞர்களிடையே அறிமுகத்தையும் உரையாடலையும் ஏற்படுத்தும் நோக்கில், தொடக்க நிகழ்ச்சியில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு மொழியை கவிதை விழா முன்னிலைப்படுத்துகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 26) மாலை 6 மணி முதல் 7 மணி வரை தேசிய நூலக வாரிய கட்டடத்தின் தி போட்டில் நடைபெறும் தொடக்க விழாவில் கலாசார விருது பெற்ற கவிஞர் க.து.மு.இக்பால் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கவிதை வாசிக்கிறார்.
“எல்லைகளைக் கட்டவிழ்த்தல்” என்ற தலைப்பில் சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் அருண் மகிழ்நன் தொடக்கவுரை ஆற்றுகிறார்.
‘கட்டுப்பாடுகளைக் களைந்து’ என்ற தலைப்பில் தேசிய பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் டாக்டர் சித்ரா சங்கரன் சிறப்புரை வழங்குகிறார்.
தேசியக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிஞரின் கவிதை வாசிப்பும் இடம்பெறும்.
தொடக்கவிழாவைத் தொடர்ந்து மூத்த கவிஞர்களின் கவிதை வாசிப்பு நடைபெறும்.
தொடர்புடைய செய்திகள்
இதில் முன்னோடிக் கவிஞர்கள் பேராசிரியர் எட்வின் தம்பு, க.து.மு.இக்பால், லீ ஸு பெங், ஸ்டெல்லா கோன், வோங் யூன் வா, ராபர்ட் இயோ முதலியோரின் கவிதை வாசிப்பை கேட்டு ரசிக்கலாம். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
ஜூலை 27, 28ஆம் தேதி நிகழ்ச்சிகள் தி ஆர்ட்ஸ் ஹவுசில் நடைபெறும். புதிய நூல் அறிமுகம், பெண்கள் குரல்கள், கவிதை வாசிப்பு, இசையும் கவிதையும், கவிதையும் ஓவியமும் போன்ற பல அங்கங்கள் தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளில் இடம்பெறவுள்ளன. உள்ளூர் இசைக்கலைஞர்கள், கவிஞர்களின் படைப்பில் பன்மொழி கட்டண இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நான்கு மொழிப் பிரிவுகளில் இடம்பெற்ற கவிதைப் போட்டிக்கான விருதுகளும் வழங்கப்படும்.
சீன ஓவியங்களுக்குக் கவிதை வாசிக்கும் கவிமாலைக் கவிஞர்கள்
கவிதை விழாவில் தேசிய கல்விக் கழக இணைப் பேராசிரியர் டான் சீ லே வரைந்த சீன எழுத்து ஓவியங்களுக்குக் கவிமாலைக் கவிஞர்கள் தமிழில் கவிதை வாசிக்கின்றனர்.
இந்நிகழ்வு 27.07.2024 சனிக்கிழமை இரவு 7 மணிக்கு Blue Room@The Art Houseஇல் நடைபெறுகிறது. கவிமாலையின் 290வது மாதாந்திரச் சந்திப்பும் நடைபெறும்.
எல்லையில்லா என்ற தலைப்பில் படித்ததில் பிடித்தது என்ற அங்கம் உண்டு. ஜூலை மாதக் கவிதைப் போட்டிக்குக் கொடுக்கப்பட்ட சங்கத்தில் பாடாத கவிதை என்னும் தலைப்பிலான கவிதை வாசிப்பும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு அனுமதி இலவசம்.
சிங்கப்பூர் கவிதை விழா
மொழி, பண்பாடு, சமய நம்பிக்கைகள் போன்ற பலவற்றையும் கடந்து பண்பாடுகளுக்கு இடையிலான நட்புணர்வை கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருகிறது இந்த விழா.
சிங்கப்பூரின் மூத்த, முன்னோடி ஆங்கில மொழி கவிஞர்களில் ஒருவரான பேராசிரியர் எட்வின் தம்புவின் அலுவலகத்தில் 2015ஆம் ஆண்டு ஜனவரியில், சிங்கப்பூரில் கவிதை விழா குறித்து உள்ளூர் சீன மொழிக் கவிஞர், ஓவியர், கல்வியாளர் டான் சீ லே, தமிழ்மொழி படைப்பாளர் கனகலதா, ஆங்கில மொழிக் கவிஞரும் கல்வியாளருமான எரிக் டின்சே வால்ஸ், மலாய் மொழி இலக்கிய ஆளுமையும் கல்வியாளருமான அசார் இப்ராஹிம் ஆகியோர் திட்டமிட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், கவிதை வாசிப்புப் போட்டிகள் போன்றவை உட்பட, புதிய சிந்தனைகள், புதிய முன்னெடுப்புகளுடன் நிகழ்ச்சிகளை நடத்தி சிங்கப்பூரின் முக்கிய இலக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது சிங்கப்பூர் கவிதை விழா.
2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கவிதைத் திருவிழா தேசியக் கலை மன்றத்தின் தொடக்க நிதியுதவியைப் பெற்றது. அதன் பின்னர் அது சுயசார்புடையதாக செயல்பட்டு வருகிறது.
கவிதைத் திருவிழா தொடர்ந்து வளர உதவும் வகையில் கவிதைத் திருவிழாவுக்கு கினோகுனியா புத்தகக் கடை, சில அனைத்துலகப் பள்ளிகள், தனிப்பட்ட ஆதரவாளர்களின் ஆதரவு இன்னும் இருப்பதாக விழாவின் இயக்குநர்களில் ஒருவரான எரிக் வால்ஸ் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளாக கவிதை விழாவில் பெருகிவரும் பார்வையாளர்களையும் உள்ளூர் இலக்கிய சமூகத்தின் வளர்ச்சியையும் காண்பதாகக் கூறிய அவர், “கவிதைகளை ஊக்குவிப்பதில் உறுதியாக இருப்பதால் நாம் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். சமூகப் பொறுப்பு உணர்வை உணர்கிறோம்,” என்றார் அவர்.
“கவிதையின் மூலம் உணர்ச்சியாகும், இது எந்தவொரு பண்பாடு அல்லது மொழிப் பாரம்பரியத்திற்கும் பொதுவானது. ஜப்பானியர்கள் அல்லது சீனர்கள் ஷேக்ஸ்பியரை உணர முடிவதைப் போலவே, இந்த உணர்ச்சிகளை மொழிபெயர்க்கலாம்,” என்றார் அவர்.
இளம் கவிஞர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட கவிதை விழா தளம் அமைத்துத் தருகிறது.
சிங்கப்பூர் கவிதை விழா 2024 “un.bound”
ஜூலை 26-28 (வெள்ளி - ஞாயிறு வரை)
விவரங்களுக்கு காண்க: pfs2024.peatix.com