தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுகாதாரத் துறை மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்

3 mins read
aae1b25a-a100-45b1-90e7-3eb9af51ef34
இந்த விருதும் உபகாரச் சம்பளமும் பெற்றது தனது பெற்றோருக்கு பெருமையளித்துள்ளது என்று சொல்லும் இவர், பொதுச் சுகாதாரத் துறையில் பங்களிக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாகச் சொன்னார். - படம்: முகம்மது தௌஃபிக்

எம்ஓஎச் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘சுகாதாரப் பராமரிப்பு உபகாரச் சம்பளம்’ வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 26) ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் 13 சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த 108 மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மற்றும் சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் பங்கேற்றார்.

சிறந்த மதிப்பெண்கள் மட்டுமின்றி, தலைமைத்துவப் பண்பு, சமூகப்பணி, பொதுச் சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஆர்வம் உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.

“மூப்படைந்து வரும் சமூகத்தின் எதிர்கால சுகாதாரத் தேவைகளை செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திறம்பட நிறைவேற்ற முயல வேண்டும். சிகிச்சை தரத்தை உயர்த்துவதுடன், சமூகத்தின் ஒட்டுமொத்த உடல்நலனும் மேம்பட உறுதிசெய்ய வேண்டும்,” என்றார் அமைச்சர் ஓங்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் இந்த உபகாரச் சம்பளம் பெற்ற மாணவர்கள் சிலரைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், அவர்களது வளர்ச்சியையும் அவர்களின் சமூகப் பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார்.

பொதுச் சுகாதாரத் துறை நன்கு ஊதியமளிக்கும், தொழில் வளர்ச்சி வாய்ப்பளிக்கும் துறையாக மாறும் என்றும் தொடர்ந்து மாணவர்கள் அத்துறை மீதான விருப்பத்தை வளர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் சுகாதாரத் துறையின் மேம்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் சுகாதாரத் துறைசார் கல்வி பயிலும் மாணவர்களில் சிறந்து விளங்குவோர்க்கு 2009 முதல் ஆண்டுதோறும் இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உபகாரச் சம்பளம் மாணவர்களின் கல்விக் கட்டணம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயில்வோர்க்கு தங்குவிடுதிக் கட்டணம், மாதாந்திரக் கல்விச் செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

இவை தவிர, மாணவர்கள் துறைசார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகளில் பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்படும். வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கு பரிமாற்றத் திட்டத்துக்கும் ஆதரவளிக்கப்படும்.

தாதியர், ரேடியோகிராஃபி, பாத மருத்துவம், இயன் சிகிச்சை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த நிபுணர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்த உபகாரச் சம்பளம் மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்குவிப்பையும் வழங்குகிறது.

தந்தை வழியில் தனயன் 

சுகாதார அமைச்சரிடமிருந்து உபகாரச் சம்பளம் பெறும் தௌஃபிக்.
சுகாதார அமைச்சரிடமிருந்து உபகாரச் சம்பளம் பெறும் தௌஃபிக். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறு வயது முதலே மூத்தோர்க்கு பார்வைக் குறைபாடுகளைக் கண்டறியவும் உரிய பரிந்துரைகள் தருவதும் சுகாதாரம் சார்ந்த தொண்டூழியத்தில் ஈடுபடுவதுமாக இருந்த தன் தந்தையைப் பார்த்து வளர்ந்ததால் அதேபோன்ற துறையில் அடியெடுத்து வைத்துள்ளார் உபகாரச் சம்பளம் பெற்றுள்ள முகம்மது தௌஃபிக், 22.

இயன் சிகிச்சை துறையில் இளநிலைப் பட்டக்கல்வி பயிலும் இவர், “மக்கள் முழு நம்பிக்கையுடன் சார்ந்திருக்கும் துறை, சுகாதாரத் துறை. அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கும் இத்துறை சார்ந்தவர்களுக்கும் இருப்பதாகக் கருதுகிறேன். அதுவே இன்னும் பல சாதனைகளைப் புரிய வேண்டும் என்ற உந்துதலை அளிக்கும் எனவும் நம்புகிறேன்,” என்றார்.

துறைசார் அறிவை வளர்த்துக்கொள்வதுடன் கனிவான அணுகுமுறை மூலம் தன்னால் இயன்றவரை தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு சிறந்த அனுபவத்தை தர வேண்டும் எனும் கனவுடன் பயணித்து வருவதாகச் சொன்னார் தௌஃபிக்.

எதிர்காலத்தில், தன் துறைக்கு தேவையான தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மேம்பட்ட சிகிச்சை அணுகுமுறை குறித்தும் ஆய்வுகளில் ஈடுபட விருப்பமுள்ளதாகத் தெரிவித்தார் இவர்.

குறிப்புச் சொற்கள்