தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாதிமையைச் சிறப்பித்த விருதுகள்

2 mins read
17eb6726-74ea-43b6-933f-911728220295
தாதியர் பிரான்சிஸ் மேரி மசரெல்லோ, பன்னீர்செல்வம் தனபால். - படம்: லாவண்யா வீரராகவன்

சுகாதாரத் துறையில் இன்றியமையாப் பங்களிப்பைச் செய்துவரும் தாதியரைச் சிறப்பிக்கும் விதமாக மனநலக் கழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) தாதியர் தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மனநலக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் ஃபங், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மற்றும் சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கனிவுடனும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் மனநலக் கழக தாதியரைக் கௌரவிக்கும் விதமாக 20 சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

மொத்தம் 7 தாதிக்கு ‘ஸ்டார்’ விருதும், ஒரு சிறந்த தாதியருக்கு கழகத்தின் உயரிய விருதான ‘நைட்டிங்கேல்’ விருதும் வழங்கப்பட்டது. சிறப்பாகச் செயலாற்றிய 12 தாதியர் குழுக்களுக்கு (Ward Teams) வெவ்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டுக்கான அதிபர் விருதை வென்ற தாதிக்கு தாதிமைத் துறையின் உதவி இயக்குநர் எனச் சிறப்பிக்கப்பட்டார்.

தாதியரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், மனநலக் கழகத்தில் ஒரு நாள் தாதியாகப் பணியாற்றிய திருவாட்டி ரஹாயு உள்ளிட்ட சிலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட காணொளி திரையிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சுகாதார அமைச்சர் ஓங், ஏறத்தாழ 2,000 உள்நோயாளிகளை மனநலக் கழகம் சிறப்பாகப் பராமரித்து வருவதைச் சுட்டினார்.

தாதியரின் அளப்பரிய பணியின் சிறப்பை வலியுறுத்திப் பேசிய அவர், அனைவர்க்கும் தனது தாதியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

“நோயாளிகளுடன் பேசிப் பழகி அவர்களுக்கு ஆறுதலளிப்பதில் தொடங்கி, நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பும் வரை உடனிருந்து அவர்களைக் கவனித்துக்கொள்ளும் பயணம் மிகச் சிறப்பானது,” என்றார் 20 ஆண்டுகளாக தாதிமைப் பணியில் ஈடுபட்டுவரும் திரு பன்னீர்செல்வம் தனபால், 45.

‘பெஸ்ட் கிளினிக்கல் யூனிட்’ எனும் சிறந்த மருத்துவ உதவிக் குழுவுக்கான விருது வென்ற அணியைச் சேர்ந்த இவர், “அன்றாடம் இந்தப் பணியில் ஈடுபடுவதே விருது போன்றதுதான். இந்த விருது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது,” என்றார்.

சிறந்த தாதியர்க் குழு, சிறந்த மருத்துவ உதவிக்குழு என இரு குழு விருதுகளை வென்ற அணியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மேரி மசரெல்லோ. கடந்த 22 ஆண்டுகளாக தாதிமைப் பணியில் ஈடுபடும் இவர், உதவித் தாதியராக இணைந்து, தற்போது மருத்துவக் குழு தாதியராகப் (Nurse Clinician) பணியாற்றுகிறார்.

“தாதிமைப் பணியில் நாளும் ஈடுபட ஊக்கம் அவசியம். அதுவும் பல்வேறு நிலையில் உள்ள நோயாளிகளைக் கவனித்து குணமடைய உதவ ஒருவரால் மட்டும் முடியாது. அதற்கு கூட்டு முயற்சி தேவை. இந்த விருது அதற்கான உற்சாகத்தை அளிக்கிறது,” என்றார் இவர்.

இந்தக் குழு இணைந்து ஈராண்டுகள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருவதைத் தொடர்ந்து, சிறந்த குழுவுக்கான விருதை தாங்கள் பெற்று வருவதையும் மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டினார் மேரி.

குறிப்புச் சொற்கள்