இரு பெண்களை மானபங்கம் செய்த தனியார் விசாரணை அதிகாரிக்குச் சிறை

இரு பெண்களை மானபங்கம் செய்த தனியார் விசாரணை அதிகாரிக்குச் சிறை

2 mins read
c45761a3-1b7d-42b5-a382-73d1376b0886
ஸைனி இப்ராகிம், 55. - படம்: பெரித்தா ஹரியான்

இரு பெண்களை மானபங்கம் செய்த குற்றத்திற்காக தனியார் ஒருங்கிணைப்புச் சேவை நிறுவனம் ஒன்றின் விசாரணை அதிகாரி ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஸைனி இப்ராகிம், 55, எனப்படும் அவர் டபிள்யுஎஸ்எச் எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தபோது அவர் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மின்சிகரெட் தொடர்பான குற்றங்களில் விசாரணை நடத்துவதற்காக சுகாதார அறிவியல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட நிறுவனம் அது.

மின்சிகரெட்டுகளை வைத்திருந்த குற்றத்திற்காக 2022 ஜனவரி 6ஆம் தேதி பிடிபட்ட 41 வயதுப் பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தும் பொறுப்பில் அவர் இருந்தார்.

விசாரணைக்காக ஜாலான் புசார் அருகே மயோ ஸ்திரீட்டில் உள்ள டபிள்யுஎஸ்எச் எக்ஸ்பர்ட்ஸ் அலுவலகத்துக்கு 2022 மார்ச் 29ஆம் தேதி அந்தப் பெண் சென்றார்.

விசாரணை நடத்தும்போது தமது அருகில் அந்தப் பெண்ணை அமரச் சொன்ன ஸைனி, கேள்விகளைக் கேட்டவாறு அந்தப் பெண்ணின் தொடையைத் தடவினார்.

அதற்கு அந்தப் பெண் தெரிவித்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாத ஸைனி, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுமாறு கூறினார். தொடர்ந்து, தமது இடுப்புக்குக் கீழ் தொட்ட ஸைனியின் கையை அந்தப் பெண் தட்டிவிட்டார்.

அதே ஆண்டு ஜூலை 6ஆம் தேதி 44 வயதுடைய மற்றொரு பெண் மின்சிகரெட் குற்றத்திற்காக அதே அலுவலகத்துக்கு விசாரணைக்காகச் சென்றார். விசாரணை நடைபெற்ற இரண்டு மணி நேரமும் அந்தப் பெண்ணும் ஸைனியும் தனியாக இருந்தனர்.

அப்போது அந்தப் பெண்ணிடம் அருவருக்கத்தக்க, பாலியல் ரீதியான வார்த்தைகளை ஸைனி பயன்படுத்தியதாகவும் விசாரணை முடிந்து புறப்பட்ட பெண்ணின் மார்பைத் தொட்டதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

அதிக தண்டனை கிடைக்குமோ என்று கேட்ட அந்தப் பெண்ணிடம் பாலியல் சுகத்திற்கு அனுமதித்தால் விசாரணையை சாதகமாக முடிப்பதாக ஸைனி கூறினார். அதனை அந்தப் பெண் ஏற்கவில்லை.

இரண்டு மானபங்கக் குற்றங்கள் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை ஸைனி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 26) அவருக்கு இரண்டு ஆண்டு, 4 மாதம், 10 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்