அமைச்சர் விவியன்: மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருப்பது சிங்கப்பூரின் இலக்கு அல்ல

1 mins read
445f37d7-e838-4435-ae9f-afa35b0738e2
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும் சந்தித்துப் பேசினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வியந்தியன்: சிங்கப்பூரின் புதிய பிரதமராக திரு லாரன்ஸ் வோங் மே 15ஆம் தேதி பதவி ஏற்றார்.

கடந்த பல ஆண்டுகளாகப் பிரதமராக இருந்த திரு லீ சியன் லூங் அப்பதவியிலிருந்து விலகினார்.

தற்போது அவர் மூத்த அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

இந்தச் சுமுகமான தலைமைத்துவ மாற்றத்தை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அரசியல் அணுகுமுறை ரீதியாக மேற்கத்திய நாடுகளுக்கு முன்மாதிரியாக சிங்கப்பூரால் இருக்க முடியும் என்றார் அவர்.

ஜூலை 27ஆம் தேதியன்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடனான சந்திப்பின்போது அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

தங்கள் நாடுகளில் இருக்கும் குறைபாடுகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் சிங்கப்பூரின் அரசியல் அணுகுமுறையை மேற்கத்திய நாடுகளின் ஊடகமும் பகுப்பாய்வாளர்களும் ஆராய்ந்து வருவதாக திரு வாங் கூறினார்.

இதனை ஒட்டி கருத்து தெரிவித்த அமைச்சர் விவியன், மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருப்பது சிங்கப்பூரின் இலக்க அல்ல என்று தெரிவித்தார்.

அதேநேரம் பிற நாடுகளின் அரசியல் அணுகுமுறையையும் சிங்கப்பூர் பின்பற்றவில்லை என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் விவியன் கூறினார்.

“ஒவ்வொரு நாடும் தனித்துவம் வாய்ந்தது. அங்குள்ள சூழ்நிலைகள் தனித்துவம் வாய்ந்தவை. சிறந்த ஆட்சியை வழங்குவதே ஒவ்வோர் அரசியல் அணுகுமுறையின் நோக்கமாகும். நாட்டைச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய, நாட்டை ஆள்பவர்கள் அங்குள்ள சூழ்நிலைகள், பலம், பலவீனங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும்,” என்று டாக்டர் விவியன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்