சிங்கப்பூர் குடிமக்கள் சங்கம் (சிஏஎஸ்) தனது 60வது ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடுகிறது.
அதை முன்னிட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ‘ஹேப்பி ஃபேமிலி டே’ நிகழ்ச்சியுடன் தனது ஆண்டு விழாவையும் கியட் ஹோங் சமூக மன்றத்தில் சனிக்கிழமை (ஜூலை 27) அது இணைந்து கொண்டாடியது.
ஏறத்தாழ 400 விருந்தினர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இக்கொண்டாட்டத்தில் குடிமக்கள் சங்கத்தின் தன்னார்வ உறுப்பினர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் பிற இந்திய அமைப்புகளும் பங்காளித்துவத் தொண்டு நிறுவனங்களும் பங்கேற்றன.
சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து இணக்கமான, ஒத்திசைவான சிங்கப்பூரை உருவாக்குவதற்காக சமூக சேவை புரிவதில் கடந்த 60 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளது குடிமக்கள் சங்கம்.
இதை எடுத்துக்காட்டும் விதமாக, 1964ல் சங்கம் தொடங்கப்பட்டதிலிருந்து அதனுடன் பயணம் செய்துள்ள, அல்லது 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சங்கத்திற்காக சேவையாற்றியுள்ள 14 முன்னோடிகளும் மூத்த தன்னார்வ உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்டனர்.
முன்னோடிகளுக்கு மேடையில் பரிசுகளை வழங்கி அமைச்சர் சண்முகம் கௌரவித்தார்.
முன்னோடியும் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவருமான மைக் சேகரன், 63, காற்பந்துச் சங்கம் என்று தொடங்கப்பட்ட நிலையிலிருந்து தொண்டு அமைப்பாக திகழும் தற்போதைய நிலை வரை எவ்வளவு மாற்றங்களைச் சங்கம் கண்டுள்ளது என்பதை நினைவுகூர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“கைப்பேசி இல்லாத அக்காலத்தில் காற்பந்துதான் எங்களுக்குப் பொழுதுபோக்கு. ஆனால், காலப்போக்கில் எங்களுக்கு வயதானதால் சமூக சேவை, தொண்டூழியம், குடும்பப் பிணைப்பு போன்றவற்றில் பொதுமக்களிடையே ஈடுபாட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கினோம்.
“அறுபது ஆண்டுகளாக இதைத் தொடர்ந்து செய்வோம் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தச் சங்கத்தின்வழி வாழ்நாள் நண்பர்களைப் பெற்றதோடு, அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் அவர்.
அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்து சொந்தமாக மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படத் தொடங்கிய குடிமக்கள் சங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டினார் அமைச்சர் சண்முகம்.
“1964 என்பது இன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் மாறுபட்ட ஒரு காலம். அப்பொழுதே சமூகச் சிந்தனையுடன் செயல்பட்டு, 60 ஆண்டுகளாக அவர்களின் முயற்சிகளைத் தொடர்ந்து, மாறிவரும் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு வருவது ஒரு பெரிய விஷயம்.
“மேலும், முன்னோடிகள் என்று அழைக்கப்படும் மூத்தவர்களும் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அதே நேரத்தில், இளையர்களும் உள்ளனர். இதுபோன்ற அமைப்புகள் சமூகப் பிணைப்பை வலுப்படுத்த உதவுகின்றன,” என்று அமைச்சர் தமிழ் முரசிடம் கூறினார்.
கடந்த 15 ஆண்டுகளாக சங்கத்தின் தலைவராக செயல்பட்டுவரும் எம்.பி.செல்வம், 68, அதன் தாக்கம் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
“குடும்பங்கள் ஒன்றுகூடி குதூகலமாக நேரத்தைச் செலவிட ஆரம்பிக்கப்பட்டது ‘ஹேப்பி ஃபேமிலி டே’ நிகழ்ச்சி. குடும்பம் எனச் சொல்லும்போது, அவர்களின் சொந்த குடும்பம் மட்டுமில்லாமல் நமது சங்கத்தின் குடும்பத்தையும் குறிக்கிறோம். அவ்வகையில் இவ்வாண்டு நமது வைர விழாவையும் கொண்டாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
“மேலும், இளையர்கள் பலரும் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தலைமைத்துவப் பயிற்சியுடன், அங்கீகாரமும் சமூக சேவையில் ஈடுபட பல வாய்ப்புகளும் அவர்களுக்குக் கிடைக்கும்,” என்றார் அவர்.
நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் விருந்து உபசரிப்பு, நடனம், இசைக் கச்சேரிகள், அதிர்ஷ்டக் குலுக்கல் போன்றவற்றில் பங்கேற்றனர். சங்கத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டும் நிகழ்வுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

