கடலுக்கடியில் 466 எரிமலைகள்; சிங்கப்பூருக்கு ஆபத்து ஏற்படலாம்

கடலுக்கடியில் 466 எரிமலைகள்; சிங்கப்பூருக்கு ஆபத்து ஏற்படலாம்

2 mins read
f3dc7ce1-da2f-47f0-82a3-d8f1069c2e17
1991ல் பிலிப்பீன்சின் பினாடியுபோ வெடித்தபோது சிங்கப்பூர் முழுவதும் எரிமலை சாம்பல் படிந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் எரிமலை வெடிப்பு, சுனாமி ஏற்படாது என்று நீண்டகாலமாக நம்பப்பட்டு வருகிறது.

ஆனால் இவ்வட்டாரத்தில் கடலுக்கடியில் அதிகம் அறியப்படாத 466க்கும் மேற்பட்ட எரிமலைகள் புதைந்துள்ளன. இதனால் எரிமலை அபாயத்துக்கு சிங்கப்பூர் விதிவிலக்கல்ல என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கடலுக்குடியில் உள்ள எரிமலைகளில் ஏதாவது ஒன்று அரிதாக பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டால் சிங்கப்பூரும் பாதிக்கப்படும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

தென் சீனக் கடலில் உள்ள எரிமலை வெடித்தால் அது, சிங்கப்பூர் கடற்கரை வரை பேரலைகளை (சுனாமி) ஏற்படுத்தும்.

சிங்கப்பூரை நோக்கி பாயும் எரிமலைச் சாம்பல் சிங்கப்பூரையே ஒரு போர்வையாக போர்த்தி விடும். 1991ஆம் ஆண்டில் பிலிப்பீன்சின் பினாடியுபோ எரிமலை வெடித்தபோது சிங்கப்பூர் முழுவதும் கார், வீடுகளில் சாம்பல் படிந்தது.

அது மட்டுமல்லாமல் எரிமலைக் குழம்புகளாலும் எரிமலைப் பாறைகள் உடைவதாலும் கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவடங்கள் பாழாகி இணையத் தொடர்பு, நிதி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.

“கம்பிவடங்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீளம் கொண்டவை. இவை சேதமடைந்தால் சிங்கப்பூருக்கு பாதகமாக அமையும்,” என்று தேசிய தொழில்நுட்பப் பல்லைக்கழகத்தின் சிங்கப்பூர் புவி கண்காணிப்புப் பிரிவின் கல்வி ஆய்வாளர் முனைவர் ஆண்டிரியா வெரோலினோ கூறினார்.

2022ல் ஹங்கா-டோங்கா ஹாபாய் எரிமலை பேரளவில் வெடித்தபோது அது ஹிரோஷிமா அணுகுண்டைவிட நூற்றுக்கணக்கான அளவு சக்தி வாய்ந்ததாக இருந்தது. அதுபோன்ற பேரிடர் இவ்வட்டாரத்திலும் ஏற்பட்டால் என்னவாகும் என்று முனைவர் வெரோலினாவால் சிந்திக்க முடிகிறது.

தென் பசிபிக் கடலில் உள்ள மலை வெடித்தபோது ஜப்பான், பெரு, சிலி மற்றும் ரஷ்யா வரை பேரலைகள் எழுந்தன. டோங்கான் தீவுகளைத் தாக்கிய பேரலைகள் 20 மீட்டர் உயரத்துக்கு இருந்தன. இந்தப் பேரிடரில் 1,500க்கும் மேற்பட்டோர் புகலிடம் தேடினர். நான்கு பேர் உயிரிழந்தனர்.

பெருவில் ஏற்பட்ட பேரலைகளால் எண்ணெய்க் கப்பலிலிருந்து எண்ணெய் கசிய நேரிட்டது.

முனைவர் வெரோலினோவும் அவரது சகாக்களும் தென்கிழக்கு ஆசியா, தைவான், அந்தமான் நிக்கோபார் தீவின் கடலில் 466 கடல் மலைகளும் எரிமலைகளும் மூழ்கியிருப்பதை பட்டியலிட்டுள்ளனர். ஏற்கெனவே வெளியிடப்பட்ட தரவுகளையும் கடலடி தகவல்களையும் வைத்து அவர்கள் பட்டியலை உருவாக்கியுள்ளனர். இவற்றில் நூற்றுக்கணக்கான மிகப் பழமையான பெரிய மலைகள் ஆழத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கின்றன என்று முனைவர் வெரோலினோ கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்