சிங்கப்பூர் துறைமுகங்கள் செழிப்படைந்த 2023ஆம் ஆண்டு மற்ற துறையினரைக் காட்டிலும் எண்ணெய் மற்றும் கப்பல் எரிபொருள் துறையினர் அதிக இடைநிலை ஊதியம் ஈட்டினர்.
2023 ஜூன் மாத நிலவரப்படி அவர்களின் மாதாந்தர மொத்த இடைநிலை ஊதியம் $14,911ஆக இருந்தது.
ஜூன் மாதம் மனிதவள அமைச்சு வெளியிட்ட வருடாந்தர தொழில்முறை ஊதியத் தரவுகளில் இடம்பெற்ற வேலைகளில் இந்தத் துறையினர் தலைசிறந்த நிலையைப் பெற்றனர்.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் விற்பனை ஆன கப்பல் எரிபொருள் 51.8 மில்லியன் டன் என்னும் சாதனை அளவில் இருந்தது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அதன் விற்பனை வேகமாக அதிகரித்தது.
அந்த ஆண்டில் 50.6 மில்லியன் டன் கப்பல் எரிபொருள் விற்பனை ஆனது.
கடல்துறை மேற்பார்வையாளர் பதவிகளில் உள்ளோர் இடைநிலை மொத்த ஊதியப் பட்டியலில் மேலிடத்தில் தரப்படுத்தப்பட்டனர்.
எல்லாத் துறைகளிலும் உள்ள பொதுவான 500 தொழில்முறைகளில் அவர்களின் நிலை 19வது இடத்தைப் பெற்றது.
தொழில்நுட்பம், நிதி, ஊடகம் ஆகியவற்றில் உள்ள வேலைகளும் மொத்த இடைநிலை ஊதியப் பட்டியலின் முதல் 20 பதவிகளில் இடம்பிடித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இது தொடர்பாக சிங்கப்பூர் சம்பள வழிகாட்டியை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்டது.
மனிதவள அமைச்சின் வருடாந்தர தொழில்முறை ஊதிய ஆய்வில் இடம்பெற்ற தகவல்களையும் இதர வழிகளில் கிடைத்த தகவல்களையும் உள்ளடக்கி வழிகாட்டி உருவாக்கப்பட்டது.
2023 ஜூலை முதல் டிசம்பர் வரை ஏறக்குறைய 4,800 தனியார் துறை முதலாளிகள் அமைச்சின் ஆய்வில் பங்கேற்றனர்.
அந்த முதலாளிகளிடம் கிட்டத்தட்ட 288,700 முழுநேர சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் ஊழியர்களாக வேலை செய்தனர். 2023 ஜூன் மாதம் மத்திய சேம நிதிக்கான பங்களிப்புகளைச் செய்தவர்கள் அவர்கள்.
மொத்த இடைநிலை ஊதியப் பட்டியலில் தலைமைத் தகவல் அதிகாரிகள், தலைமைத் தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் தலைமைப் பாதுகாவல் அதிகாரிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
அவர்களின் மாதாந்தர மொத்த இடைநிலை ஊதியம் $13,840 ஆக இருந்தது. அந்தத் தொகையில் ஊழியர்களின் மத்திய சேம நிதிச் சந்தா உள்ளடங்கியபோதிலும் முதலாளிகளின் பங்களிப்பு இடம்பெறவில்லை.