சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான தெமாசெக் சீனாவில் முதலீடு செய்வதில் எச்சரிக்கையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் அது அமெரிக்க சந்தையில் அமெரிக்க டாலர் 30 பில்லியனை (S$40 பில்லியன்) முதலீடு செய்ய எண்ணம் கொண்டுள்ளது.
“பெரும்பகுதி முதலீட்டை அமெரிக்காவே பெறும்,” என வட அமெரிக்கா தெமாசெக் நிறுவனத் தலைவர் திருவாட்டி ஜேன் எதர்ட்டன் ஜூலை 29ஆம் தேதி நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
கடந்த பத்தாண்டுகளில் முதன் முதலாக இவ்வாண்டு வடக்கு, தெற்கு அமெரிக்காவில் தெமாசெக் நிறுவனத்தின் முதலீடு சீனாவில் செய்யும் முதலீட்டைவிட அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தெமாசெக் வடக்கு, தெற்கு அமெரிக்காவில் தற்பொழுது செய்துள்ள முதலீடு அதன் மொத்த முதலீட்டுத் தொகுப்பில் 22 விழுக்காடாக, அதாவது அமெரிக்க டாலர் 63 பில்லியனாக உள்ளது. ஒப்புநோக்க, சீனாவில் தெமாசெக் செய்துள்ள முதலீடு அதன் மொத்த முதலீட்டுத் தொகுப்பில் 19 விழுக்காடு என்பதுடன் உன்ளூரில் அதன் முதலீடு 27 விழுக்காடு என்று கூறப்படுகிறது.
இவ்வாண்டு மார்ச் மாத நிலவரப்படி தெமாசெக் நிறுவனத்தின் மொத்த முதலீட்டுத் தொகுப்பு $389 பில்லியன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புநோக்க, கடந்த 2023ஆம் ஆண்டு அதன் மொத்த முதலீட்டுத் தொகுப்பு $382 பில்லியனாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மின்கடத்தி உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்கப் பொருளியலின் மற்ற அம்சங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையதால், சீனா, அமெரிக்கா இரு நாடுகளும் அதில் ஆதிக்கம் செலுத்த முனைப்புக் காட்டுகின்றன. இதில் அமெரிக்கா, தனது போட்டி நாடான சீனாவின் வளர்ச்சியை குறைக்கும் நோக்கில் அந்நாட்டின் ஏற்றுமதிகள் மீது கட்டுப்பாடுகளையும் வரியையும் விதித்து வருகிறது. மேலும், சீனா மேம்பட்ட பகுதி மின்கடத்தி தொழில்நுட்பம் சீனாவுக்குக் கிடைப்பதை கட்டுப்படுத்தும் வகையில் விதிமுறை கொண்டுவரவும் அமெரிக்கா முயன்று வருகிறது.
அமெரிக்கா, சீனாவுக்கு இடையே நிலவும் இந்த மோதல் போக்கு வளர்ச்சிமிக்க துறைகளில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு இடர்ப்பாடு நிறைந்த ஒன்றாக உருவாக்கியுள்ளது. எனினும், சில கட்டுப்பாடுகள் உள்ள இந்தச் சூழலில், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பெரிய அளவில் முதலீடு செய்து பயன்பெறலாம் என்று திருவாட்டி எதர்ட்டன் கருத்துக் கூறுகிறார்.