உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் துணைக் காவல்துறை அதிகாரி ஒருவரின் கால் மீது வாகனத்தை ஓட்டிச் சென்ற ஆடவருக்கு 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரி, சோதனைச்சாவடிகளைக் கடக்கும் வாகனம் ஒவ்வொன்றிலும் குறைந்தது முக்கால் அளவு எரிசக்தி இருப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்.
சிங்கப்பூரரான 68 வயது இங் ஹோக் கியோங், கவனக்குறைவான செயலால் மோசமான காயம் விளைவித்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டு மாதங்களுக்கு வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிக்கு 2,516 வெள்ளித் தொகையை இழப்பீடாகத் தரவேண்டும் என்றும் இங்குக்கு உத்தரவிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட 31 வயது சிங்கப்பூரர், 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதியன்று உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அன்றிரவு 11 மணியளவில் இங் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியே காரை ஓட்டினார்.
தனக்கு அளிக்கப்பட்ட உத்தரவின்படி அவர் தனது காரை நிறுத்தினார். ஆனால், அவரின் காரில் இருந்த எரிபொருள் அளவைத் தெரிந்துகொள்ள அதிகாரி தனது காரை நோக்கி வந்தபோது இங் வாகனத்தை ஓட்டினார்.
காரை முன்னால் ஓட்டிச் செல்லுமாறு அதிகாரி தன்னிடம் கூறினார் என்று தவறாக நினைத்ததால் இங் அவ்வாறு செய்தார். அப்போது அவர் காரின் வலது பின்புறத்தில் இருக்கும் சக்கரம் அதிகாரியின் இடது காலின் மீது ஏறியது.
பிறகு அதிகாரி, வாகனத்தை நிறுத்துமாறு கூறி கத்தினார். இங் அதற்கேற்ப நடந்துகொண்டார்.
அதிகாரிக்கு வலி அதிகம் இல்லை. அந்த விவகாரத்தைப் பெரிதாக்கவும் அவர் விரும்பவில்லை.
தொடர்புடைய செய்திகள்
சில சோதனைகளை நடத்திய பிறகு இங்கின் காரில் முக்கால் அளவு எரிபொருள் இல்லாததை அதிகாரி உணர்ந்தார். அவர் இங்கை குடிநுழைவு ஆணைய அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றார்.
அங்கு அதிகாரி சக குடிநுழைவு அதிகாரிகளிடம் இங் தனது காலின் மீது காரை ஏற்றிச் சென்றதைத் தெரிவித்தார்.
இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு அதிகாரியின் காலில் வலி இருந்தது. அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றார். ஊடுகதிர் (எக்ஸ்ரே) சோதனையை மேற்கொண்டபோது அவர் மோசமான காயத்துக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்று தெரிய வந்தது.
பின்னர் சிகிச்சைக்காக அதிகாரி சுமார் 23,000 வெள்ளி செலவிட வேண்டியிருந்தது. அதில் பெரும்பங்கு காப்புறுதித் திட்டங்களின் மூலம் செலுத்தப்பட்டது.

