பிரேடல் சாலையில் தீப்பிடித்த சரக்கு வாகனம்

1 mins read
149c37dc-da66-463d-b866-6036b677fc4e
சரக்கு வாகனம் சாலையில் திடீரென நின்ற பிறகு அதில் தீப்பிடித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரேடல் சாலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று, உறைந்த காய்கறிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் சாலையில் திடீரென நின்ற பிறகு அதில் தீப்பிடித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குக் கிடைத்த காணொளியில், தீ எரியும்போது சரக்கு வாகனத்திலிருந்து கறுப்புப் புகை வெளியேறுவதைக் காண முடிந்தது.

‘‘சரக்கு வாகனம் சாலையின் நடுவில் நின்றுவிட்டது. அதனால் வாகனத்தின் இயந்திரத்தை மீண்டும் இயக்க முயன்றபோது,​​ பின்னால் இருந்து பலத்த சத்தம் கேட்டது,’’ என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் வாகன ஓட்டுநர் கூறினார்.

காய்கறிகளை உறைய வைக்கும் பகுதியில் தீப்பிடிக்கும் முன் அவர் உடனடியாக சரக்கு வாகனத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, பிற்பகல் 12.20 மணியளவில் பீஷான் மேம்பாலத்திற்கு முன்பாகப் பிரேடல் சாலையில் சரக்கு வாகனத்தின் இயந்திரப் பகுதியில் தீப்பிடித்த தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தது. தீக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அவசரகால மருத்துவச் சேவைகள், தீ மற்றும் அமலாக்கப் புள்ளிவிவரங்களின்படி, 2022ஆம் ஆண்டில் 204 வாகன தீச் சம்பவங்கள் நிகழ்ந்தன. 2023ல் 215 வாகனத் தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இரண்டையும் ஒப்பிடும்போது வாகனத் தீச்சம்பவ விகிதம் 5.4 விழுக்காடு அதிகரிப்பைக் காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்