சாய் சீயில் உள்ள ஒரு குடியிருப்பில் 60 வயது ஆடவரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) கண்டுபிடிக்கப்பட்டது.
சில நாள்களாகவே அவ்வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அண்டைவீட்டார் ஒருவர், சமூக சேவை அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த ஆடவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
சாய் சீ ரோடு, புளோக் 22ல் உள்ள அவ்வீட்டில் நிகழ்ந்த இந்த மரணத்தை உறுதிப்படுத்திய காவல்துறை, அதனை இயற்கைக்கு மாறானதாக வகைப்படுத்தியுள்ளதாக ‘மதர்ஷிப்’ செய்தி தெரிவித்தது.
கடந்த ஐந்து நாள்களாக, அதாவது ஜூலை 26ஆம் தேதியிலிருந்தே அந்த ஆடவரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக சென் என்றழைக்கப்படும் அந்த அண்டைவீட்டார் கூறினார்.
“எலி செத்ததைப்போல் நாற்றமடித்தது. சமூக சேவை அலுவலர் காவல்துறையை அழைத்த பிறகே, என் அண்டைவீட்டார் அவரது வீட்டிலேயே இறந்துகிடந்ததை உணர்ந்தேன்,” என்றார் திருவாட்டி சென்.
அந்த ஆடவர் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக அங்கு வசித்து வந்தார் என்றும் அவர் மற்றவர்களுடன் அதிகம் பேசமாட்டார் என்றும் திருவாட்டி சென் சொன்னார்.
புற்றுநோய்க்காக அந்த ஆடவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தாம் கேள்விப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அதன் கதவில் மூத்தோர் தலைமுறை அலுவலகத்தின் தொடர்பு விவரங்களுடன் கூடிய துண்டறிக்கை வைக்கப்பட்டிருந்ததாக ‘ஷின் மின்’ செய்தி கூறியது.
தொடர்புடைய செய்திகள்
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அந்த ஆடவரின் இறப்பில் சூது எதுவும் இருப்பதாகச் சந்தேகிக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்தது. விசாரணை தொடர்கிறது.