பிறந்த குழந்தைகளுக்குபுதிய சேமிப்புக் கணக்கு

2 mins read
5ffa20db-9019-47a4-b1c6-bcff4e5a0810
பெற்றோர்கள் ரொக்கப் பணத்தைப் பெறுவதையும் குழந்தை நிதியை நிர்வகிப்பதையும் குழந்தை சேமிப்புக் கணக்கு எளிமையாக்கும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூலை 1ஆம் தேதியிலிருந்து புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு குழந்தை போனஸ் திட்டத்தின்கீழ் புதிய சேமிப்புக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு வருகிறது.

இது, வழக்கமான சேமிப்பு கணக்கு போன்றதே.

பிள்ளை மேம்பாட்டுக் கணக்கின் அறங்காவலர் மற்றும் குழந்தையால் நிர்வகிக்கப்படும் இந்தக் குழந்தை மேம்பாட்டுக் கணக்கு (Child Development Account), அரசாங்கத்தின் கல்வி உதவி நிதியையும் ரொக்கப் பணத்தை பெற்றோர் பெறுவதையும் எளிமையாக்கும்.

சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஜூலை 31ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இத்திட்டத்தில் டிபிஎஸ்/போஸ்பேங்க், ஓசிபிசி வங்கி, யுஓபி வங்கி ஆகியவை அங்கம் வகிக்கின்றன.

ஏற்கெனவே குழந்தை மேம்பாட்டுக் கணக்கு என்று ஒன்று இருக்கிறது. இது, குழந்தையின் கல்விக்கும் சுகாதாரப் பராமரிப்பு செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஜூலை 1ஆம் தேதிக்கு முன்பு குழந்தை போனஸ் திட்டத்திற்கு பதிந்துகொண்ட குழந்தைகளுக்கு அவர்களின் அறங்காவலர், ஏற்கெனவே உள்ள குழந்தை மேம்பாட்டு கணக்கின் வங்கி மூலம் குழந்தை சேமிப்புக் கணக்கைத் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

ஆனால் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து தகுதிபெற்ற பெற்றோர், லைஃப்எஸ்ஜி (LifeSG) கைப்பேசி செயலி அல்லது இணையத் தளம் வழியாக குழந்தை போனஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு முன்பு குழந்தைப் பிறப்பை பதிவு செய்யும்போது அந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்காத பெற்றோர், குழந்தை போனஸ் இணையத் தளம் வழியாக விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் இனி குழந்தை போனஸ் விண்ணப்பங்களும் கணக்குச் சேவைகளும் குழந்தை போனஸ் இணையத்தளத்தில் இடம்பெறாது.

குழந்தை போனஸ் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் லைஃப்எஸ்ஜிக்கு மாற்றப்படுவதால் ஒரே இடத்தில் சேவைகளை பெற்றோர் பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்று அமைச்சு தெரிவித்தது.

இங்கு, திட்டத்திற்கு விண்ணப்பிப்பது மட்டுமல்லாமல் புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு இதர சேவை, விவரங்களையும் பெற முடியும் என்று அமைச்சு மேலும் கூறியது.

குறிப்புச் சொற்கள்