சிங்கப்பூர் பொதக்குடி சங்கத்தின் 10ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) நடைபெற்றது.
சிங்கப்பூரில் வசிக்கும் பொதக்குடி ஊரைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள பிள்ளைகளுக்கு கல்விக்கான பற்றுச்சீட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கேலாங் வெஸ்ட் சமூக மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிஸால் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பொதக்குடி சங்கம் கடந்த பத்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் செய்து வந்துள்ள பொதுநலச் சேவைகளை டாக்டர் ரிஸால் பாராட்டினார்.
பொதக்குடி சங்கத்தின் தலைவர் ஏ.அப்துல் சுக்கூர் வரவேற்புரை ஆற்றினார். சமூகத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் பொதக்குடி சங்க உறுப்பினர்கள் அனைவரையும் பாராட்டி நினைவுப் பரிசுகளை அவர் வழங்கினார்.
துணைத் தலைவர் என்.அப்துல் மாலிக்கிற்கு தலைசிறந்த சேவைக்கான சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.
“கடந்த பத்து ஆண்டுகளாக நம் சங்கம், பொதக்குடி வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள் ஒன்றுகூடவும் அவர்களின் பாரம்பரியத்தைக் கொண்டாடவும் சமூகப் பிணைப்பை வலுப்படுத்தவும் குடும்ப தின விழாக்கள், மருத்துவ முகாம்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளைச் சிறப்பாக நடத்தி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
அத்துடன், 10ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பத்து சிங்கப்பூர்வாழ் பல்லின சமூக மாணவர்களுக்குக் கல்வி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சங்கத்தின் இளையர் பிரிவு உறுப்பினரான சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர் நூர் ரிபாத் நெறியாளராக நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
‘நம்பிக்கைதரும் இளையர்’ (Promising Youth) விருது பெற்ற ‘ஐஎம்யூத்’ அமைப்பின் தலைவர் முஹம்மது ஆஷிக் நன்றியுரை வழங்கினார்.
சிங்கப்பூரில் வசிக்கும் பொதக்குடி வம்சாவளியினர், குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டு அகமகிழ்ந்தனர்.
மாயாஜால நிகழ்ச்சி, அதிர்ஷ்டக் குலுக்கலைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டு, அனைவருக்கும் அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.

