செந்தோசாவில் உள்ள சிலோசோ கடற்கரை மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி நிகழ்ந்த எண்ணெய்க் கசிவு சம்பவத்துக்குப் பிறகு மூடப்பட்ட சிலோசோ கடற்கரை சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 3) திறந்துவிடப்பட்டது.
எண்ணெய்க் கசிவு காரணமாக செந்தோசாவில் மூன்று கடற்கரைகள் மூடப்பட்டன. அவற்றில் சிலோசோதான் மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ள முதல் கடற்கரையாகும்.
எண்ணெய்ச் சுத்திகரிப்புப் பணிகள் முடிந்தவுடன் எஞ்சிய இரு கடற்கரைகளான பலாவான், தஞ்சோங் ஆகியவை ஆகஸ்ட் மாதம் மீண்டும் திறக்கப்படும் என்று செந்தோசா மேம்பாட்டுக் கழகம் (எஸ்டிசி) சனிக்கிழமையன்று தெரிவித்தது. நீரின் தரம் இயல்புநிலைக்குத் திரும்பியவுடன் அவற்றில் மீண்டும் நீர் நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் எஸ்டிசி குறிப்பிட்டது.
சிலோசோ கடற்கரை திட்டமிடப்பட்டதற்கு முன்னரே மீண்டும் திறக்கப்பட்டது. அங்கு எண்ணெய் சுத்தகரிப்புப் பணிகள் ஒன்றரை மாதங்களில் நிறைவடைந்தன. பொதுவாக அப்பணிகளுக்கு அதில் இரு மடங்கு காலம் ஆகும்.
படகு ஒன்று எண்ணெய்க் கப்பல் மீது மோதியதால் 400 டன்னுக்கும் அதிகமான எண்ணெய் சிங்கப்பூர் கடற்பகுதிகளில் கசிந்தது. அதனைத் தொடர்ந்து செந்தோசா, தெற்குத் தீவுகள் ஆகியவற்றில் நீர் நடவடிக்கைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
சுத்திகரிப்புப் பணிகளில் உதவ விரும்பிய பொதுமக்கள் பேராதரவு அளித்ததாக எஸ்டிசி தலைமை நிர்வாகி தியென் குவீ எங் கூறினார். சிலோசோ கடற்கரையின் திறப்பு நிகழ்ச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
குறிப்பிட்ட சில கருவிகளையும் பணியாளர்களையும் கொண்டு முதலில் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்தக் கட்டம் நிறைவடைந்த பிறகு உதவிக்கரம் நீட்ட தொண்டுழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களை வல்லுநர்கள் வழிநடத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
சிலோசோ கடற்கரையில் சிதைவுகள் உள்ளிட்டவற்றை அகற்ற கிட்டத்தட்ட 450 தொண்டூழியர்கள் உதவிக்கரம் நீட்டியதாக எஸ்டிசி தெரிவித்தது.