பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள், புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது போன்றவை அண்மைக் காலமாக கவனத்தை ஈர்த்துள்ளன.
எனினும், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழல் சட்டத்தில் அதிக ஆர்வம் காணப்படவில்லை. 1996ஆம் ஆண்டில் வங்கி, வர்த்தகச் சட்டங்கள் மீதுதான் அதிக கவனம் இருந்ததாக பேராசரியர் சின் டெட் யுங் தெரிவித்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டப் பிரிவுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
அப்படிப்பட்ட சூழலிலும் அந்த ஆண்டு ஆசிய பசிபிக் சுற்றுச்சூழல் சட்ட நிலையத்தை (ஏபிசிஇஎல்) அமைக்க அவர் ஒப்புதல் வழங்கினார். தனது முற்போக்கு சிந்தனைக்காக பேராசிரியர் சின் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதியன்று ஏபிசிஇஎல் நடத்திய கொண்டாட்ட நிகழ்ச்சியில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட 33 சுற்றுக்சூழல் ஆர்வலர்களில் பேராசிரியர் சின்னும் ஒருவர். ‘குட் ஸ்டோரீஸ் மூவ்மென்ட்’ என்றழைக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை மேற்கொள்வோரை அங்கீகரிக்கும் இயக்கத்தின்கீழ் அவர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
முதன்முறையாக இந்த விருதுகள் சிங்கப்பூரில் வழங்கப்பட்டுள்ளன.
பேராசிரியர் சின், குற்றவியல் சட்டம், தகவல் தொடர்பு சட்டம், ஒப்பந்தச் சட்டம் ஆகியவற்றில் பாண்டித்துவம் பெற்றவர். இருந்தாலும் சுற்றுச்சூழல் சட்டத்தின் முக்கியத்துவத்தைத் தாம் அறிந்ததாகத் தெரிவித்தார்.
ஏபிசிஇஎல் தொடங்கப்பட்டதிலிருந்து அந்நிலையம் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் பல வழக்கறிஞர்களுக்குத் தீவிர பயிற்சிகளை வழங்கியுள்ளது.

