வாட்ஸ்அப் ஆள்மாறாட்ட மோசடிகளில் $46,000 இழப்பு

வாட்ஸ்அப் ஆள்மாறாட்ட மோசடிகளில் $46,000 இழப்பு

2 mins read
3392a539-008f-4267-ab69-f2aa3a8b4f9c
அதிகாரப்பூர்வ ‘வாட்ஸ் அப் ‘இணையப் பக்கத்திற்குப் பதிலாகப் போலியான ‘வாட்ஸ் அப்’ இணையப் பக்கத்தைப் பயன்படுத்தும் பயனாளர்களே மோசடிக்காரர்களின் இலக்கு எனக் காவல்துறை தெரிவித்தது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

இவ்வாண்டு ஜனவரி முதல் ‘வாட்ஸ் அப்’ ஆள்மாறாட்ட மோசடிகள் பற்றி குறைந்தது 20 புகார்கள் வந்துள்ளதாக ஆகஸ்ட் 6ஆம் தேதி காவல்துறை தெரிவித்தது. இந்தக் காலகட்டத்தில் இதுபோன்ற மோசடிகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட $46,000 இழந்தனர் என்றும் அது குறிப்பிட்டது.

இந்த மோசடிகள் குறித்து முதன்முதலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகாரளிக்கப்பட்டன என்றும் அவை மீண்டும் நடைபெறத் தொடங்கியிருப்பதால், பொதுமக்கள் விழிப்பாக இருக்கும்படி காவல்துறை எச்சரித்தது.

மோசடிக்காரர்கள் போலியான ‘வாட்ஸ் அப் வெப்’ (WhatsApp Web) இணையப் பக்கத்தின் மூலம் பயனர்களின் கணக்கில் ஊடுருவி அதைக் கட்டுபடுத்துகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

கூகல் போன்ற தேடுபொறிகளில், போலியான ‘வாட்ஸ் அப்’ இணையப் பக்கத்தைப் பயன்படுத்தும் பயனாளர்களே மோசடிகாரர்களின் இலக்கு எனக் காவல்துறை தெரிவித்தது.

மேலும், அந்தப் போலியான இணையப்பக்கத்தில் இருக்கும் இணைப்புகளைச் சரிபார்க்காமல் சொடுக்கும்போது அவை உண்மையான ‘வாட்ஸ் அப்’ ‘கியூ ஆர்’ குறியீடு பதிக்கப்பட்ட மோசடி இணையத்தளப் பக்கங்களுக்கு அழைத்துச் செல்லும் என்றும் அது கூறியது.

அந்தக் குறியீட்டை மோசடிக்காரர்கள் வருடினால், அவர்கள் வாட்ஸ் அப் பயனர்களின் கணக்கில் ஊடுருவ முடியும் என்றும் பயனர்களும் தங்கள் கணக்கைக் கைபேசியிலும் கணினியிலும் பயன்படுத்த முடியும் என்பதால் இந்த மோசடியை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர், மோசடிக்காரர்கள் பயனர்களுடன் ‘வாட்ஸ் அப்’ மூலம் தொடர்பில் இருப்பவர்களைப் பயனர் போல் ஆள்மாறாட்டம் செய்து அணுகி அவர்களிடம் அவசரமாகப் பண உதவி வேண்டும் என முறையிடுவர் என்றும் அவர்கள் கூறினர்.

மோசடிக்காரர்கள் அளிக்கும் வங்கி கணக்கு அல்லது ‘பே நவ்’ எண்ணுக்குப் பணம் செலுத்தும்படி கூறுவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் இது போன்ற மோசடிகளில் குறைந்தது 93 பேர் சிக்கினர் என்றும் அவர்கள் கிட்டத்தட்ட $176,000 பறிகொடுத்தனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மோசடி பற்றிய மேல்விவரங்களுக்கு, பொதுமக்கள் www.scamalert.sg இணையத்தளத்தை நாடலாம் அல்லது 1800-722-6688 தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்