சாங்கி பொது மருத்துவமனையில் கடமையாற்றிக் கொண்டிருந்த செர்டிஸ் துணைக் காவல் அதிகாரியான ஆபிரகாம் லிங்கனின் துப்பாக்கியைப் பறித்த ஆடவர்மீது நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்தக் குற்றத்தைப் புரிந்த 40 வயது ஆடவரின் பெயர் கோ சுவான் சோங்.
அவர், ஆகஸ்ட் 4ஆம் தேதி திரு ஆபிரகாம் லிங்கன் பணியில் இருந்தபோது அவருடைய பயன்பாட்டு இடைவாருடன் இணைக்கப்பட்ட உறையில் இருந்த துப்பாக்கியை எடுத்ததாக அதில் கூறப்பட்டது.
கோமீது ஆயுதக் குற்றச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருக்க முயன்றதாகச் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவப் பரிசோதனைக்காக கோ மனநலக் கழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரை மீண்டும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்தை முதல்முறை புரியும் குற்றவாளிக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.