போலி மரணச் சான்றிதழைப் பயன்படுத்தி கருணை விடுப்பு பெற முயன்றதாக வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 8) மாது ஒருவரின் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான சீனாவைச் சேர்ந்த 37 வயது சூ சின் மீது, மருத்துவ விடுப்பு பெற போலி மருத்துவச் சான்றிதழ்களைத் தயார்செய்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியன்று சூ, செயின்ட் லியுக்ஸ் மருத்துவமனையின் பெயரைக் கொண்ட மின்னிலக்க மருத்துவ விடுப்பு ஆவணத்தை இடிசி சிங்கப்பூர் எஸ்இசி லிமிடெட் எனும் தான் வேலை செய்த நிறுவனத்திடம் சமர்ப்பித்ததாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியானது என நம்பப்படும் அந்த மருத்துவ விடுப்பு ஆவணம், கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியைக் கொண்டிருந்தது என்றும் அது புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 11ல் உள்ள ஒரு வீட்டில் தயார்செய்யப்பட்டது என்றும் நம்பப்படுகிறது.
அதே மருத்துவமனை அளித்தது போன்றிருந்த வேறொரு போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழையும் சந்தேக நபர் தயார்செய்து ஏப்ரல் எட்டாம் தேதியன்று தனது நிறுனத்திடம் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. அந்த மருத்துவ விடுப்பு ஏப்ரல் 5 என்ற தேதியைக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருமுறையும் மருத்துவ விடுப்பு பெறுவதற்காக சூ, தனது நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரை ஏமாற்ற முயற்சி செய்தார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஏப்ரல் 15ஆம் தேதியன்று சூ, சாங் வெய்ச்சின் என்பவரின் போலி மரணச் சான்றிதழைத் தான் வேலை செய்த மற்றொரு நிறுவனத்திடம் சமர்ப்பித்தாகவும் நம்பப்படுகிறது. ஏப்ரல் 8 என்ற தேதியைக் கொண்டிருந்த அந்த மரணச் சான்றிதழை சூ, தான் வேலை செய்த செஞ்சுரி கேம்ஸ் எனும் இணைய விளையாட்டு நிறுவனத்திடம் சமர்ப்பித்ததாகச் சொல்லப்படுகிறது.
அதன் மூலம் அவர், ஏமாற்றி கருணை விடுப்பு பெற முயன்றதாகக் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்புப் பதிவுச் சட்டத்தின்கீழ் தெரிந்தே போலி மரணச் சான்றிதழைப் பயன்படுத்துவது குற்றமாகும்.
தற்போதைய நிலவரப்படி சூ புரிந்ததாக நம்பப்படும் குற்றங்கள் எவ்வாறு வெளிச்சத்துக்கு வந்தன என்பது தெரியவில்லை.

