தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

6,774 பேருக்கு தேசிய தின விருது

2 mins read
4dd773da-e8b3-4642-b64c-d57e60f8258c
நாட்டின் உயரிய ‘நீல உத்தமா’ (உச்சத் தகுதி) விருது பெறுகிறார் நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவர் திரு பீட்டர் ஹோ ஹக் இயன். - படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம்
multi-img1 of 3

சிங்கப்பூர் தனது 59வது தேசிய தினத்தைக்  கொண்டாடி மகிழும் வேளையில், 2024ஆம் ஆண்டிற்கான தேசிய தின விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சீரிய முறையில் பணியாற்றி, சமூகத்திற்குச் சிறப்பான வகையில் பங்களிப்பு வழங்கியதற்காக  6,774 பேர் இந்த ஆண்டிற்கான தேசிய தின விருதுகளைப் பெறுகின்றனர்.

நாட்டின் உயரிய ‘நீல உத்தமா’ (உச்சத் தகுதி) விருது பெறுகிறார்  நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவரான 70 வயது திரு பீட்டர் ஹோ ஹக் இயன்.  

முப்பது ஆண்டுகளாக அரசு ஊழியராகச் சேவையாற்றியது உட்படச்  சிங்கப்பூருக்கு ஏறத்தாழ 50 ஆண்டுகளாக  அரும் பணியாற்றிய அவரது பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் திரு ஹோவுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் சுகாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் திருமதி ஜென்னி சுவா, தேசிய பல்கலைக்கழக சுகாதாரக் குழுமத்தின் தலைவர் திரு சியே ஃபு ஹுவா, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் முன்னாள் தலைவர் திரு பீட்டர் ஓங் உள்ளிட்ட அறுவர் இந்த ஆண்டிற்கான மேன்மை தங்கிய சேவை விருதைப் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, சமூக சமரச நிலையத்தின் சமரச அதிகாரி திரு ப திருநாவுக்கரசு பொதுச் சேவை நட்சத்திர (பார்) விருது பெறுகிறார்.

சட்ட அமைச்சின் கீழ் செயல்படும் இப்பிரிவில் சிறப்பான பங்களிப்பிற்காக விருதைப் பெறும் திரு திருநாவுக்கரசு, இந்த விருதை சமூகப் பணி  மற்றும் அடித்தளப் பணியில் ஈடுபட்டுவரும்  ஒவ்வொருவருக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறினார்.  

கடப்பாடும், ஆர்வமும்தான் பொதுவாழ்வு சார்ந்த பயணத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறிய அவர், தமது  குடும்பத்தினர் தனக்காகச் செய்த தியாகங்களுக்காகத் தாம் கடமைப்பட்டிருப்பதாகச் சொன்னார்.

“சமரசத்திற்காக  என்னை அணுகுபவர்கள் சீற்றமாக வந்தாலும், சமரச அமர்வுகளுக்குப் பிறகு அவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பிசெல்லும்போது எனக்குக் கிடைக்கும் மனநிறைவு  அளவிட முடியாதது,” என்று குறிப்பிட்டார்  திரு திருநாவுக்கரசு, 63. மேலும் இந்தப் பணி, சக மனிதர்களுக்குச்  சேவையாற்ற வாய்ப்பு கொடுக்கும் உன்னதப் பணி,” என்றும்  தமிழ் முரசிடம் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த ஆண்டு தமக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் பாராட்டுப் பதக்கம் பற்றி தமிழ் முரசிடம் கருத்துரைத்தார் முனைவர் அனிதா தேவி பிள்ளை. கல்வி அமைச்சின் தேசிய கல்விக் கழகத்தின் ஆங்கிலத் துறை மற்றும் இலக்கியப் பிரிவின் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றும் திருவாட்டி அனிதா, தேசிய கல்விக் கழகத்தில் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகச் சொன்னார்.

இத்துறையில் சேவையாற்ற அவர்களின் ஆதரவும், நல்கிய ஊக்கமும் சிறப்பானது என்பதாகச் சொன்ன முனைவர் அனிதா, தனது வாழ்வில் ஏற்பட்ட ஒவ்வொரு சவாலிலும் தன்னுடன் துணை நின்ற தனது தந்தைக்கும், தனது மகன் தேஜஸுக்கும் இவ்விருதை உரித்தாக்குவதாகக் கூறினார்.

தேசிய விருது பெறுவோரின் முழுப் பட்டியல் விவரத்தை கீழ்க்கண்ட இணையப்பக்கத்தில் பார்வையிடலாம்: https://www.pmo.gov.sg/national-day-awards

குறிப்புச் சொற்கள்