கட்டுமானப் பணி நடைபெறும் கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து இரும்புக் குழாய் ஒன்று விழுந்ததில் வெளிநாட்டு ஊழியர் மரணமடைந்தார்.
ஜூலை 29ஆம் தேதி காலை 9 மணியளவில் ஜூரோங் வட்டாரத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது கட்டடத்தின் கீழே 42 வயது பங்ளாதேஷ் ஊழியர் நின்றுகொண்டு இருந்தார்.
இரும்புக் குழாய் விழுந்ததில் அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அவரை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்த்தனர்.
மூன்று நாள்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 1ஆம் தேதி அந்த ஊழியர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஜூரோங் போர்ட் ரோட்டின் அருகே ஜாலான் தெருசானில் உள்ள கட்டுமானத் தளத்தில் அந்த விபத்து நிகழ்ந்தது.
உள்ளூர் கட்டுமான நிறுவனமான கேடிசி குரூப்பின் துணை நிறுவனமான ‘கோக் தோங் டிரான்ஸ்போர்ட் அண்ட் எஞ்சினியரிங் வொர்க்ஸ்’ என்னும் நிறுவனம் அந்த இடத்தில், பழுதுநீக்கும் பட்டறை ஒன்றை கட்டி வருகிறது.
2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் கட்டுமானப் பணிகளை முடிக்க அந்நிறுவனம் திட்டமிட்டு இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஊழியர் காயமடைந்தது தொடர்பாக சம்பவத்தன்று காலை 9.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மாண்ட ஊழியர் ‘ஃபூ செங் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன்’ என்னும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்.
மனிதவள அமைச்சு அந்தச் சம்பவத்தை விசாரித்து வருகிறது.
அந்தக் கட்டுமான வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லாப் பணிகளையும் உடனே நிறுத்துமாறு கேடிசி குழமத்தின்கீழ் செயல்படும் கோக் தோங் கட்டுமான நிறுவனத்துக்கு அமைச்சு உத்தரவிட்டது.
“கட்டடங்களின் மேல்பகுதியில் வேலைகள் நடைபெறும்போதும் பொருள்களை மேல் நோக்கித் தூக்கும்போதும் அதன் தரைத்தளத்தில் யாரும் சென்றுவிடாத வகையில் அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது பொதுவான பாதுகாப்பு நடவடிக்கை.
“மேலும், பொருள்கள் கீழே விழும் அபாயத்தைக் குறிக்கும் வகையில் அந்த இடம் வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும்,” என்று அமைச்சு தெரிவித்து உள்ளது.
வேலையிடங்களில் இந்த ஆண்டில் இதுவரை குறைந்தபட்சம் ஒன்பது பேர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு வேலையிட விபத்துகளில் 36 ஊழியர்கள் மரணமடைந்தனர். அதற்கு முந்திய ஆண்டில் அந்த எண்ணிக்கை 46 ஆகவும் 2021ல் 37 ஆகவும் இருந்தது.